நீஸ்: தொழில்நுட்ப நிபுணத்துவம் நிறைந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் சென்றுள்ள அவர் நீஸ் நகரில் ‘பாரத் இனோவேட்ஸ்’ நிகழ்வின் தொடக்கவிழாவில் பேசியபோது, “பத்தாண்டுக்கு முன்பு வரை தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு நாடாக இந்தியாவை உலகம் பார்த்தது. ஆனால், தற்போது தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உலகுக்கு வழங்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா வழங்கும் புத்தாக்கங்களும் தீர்வுகளும் மனிதகுலத்தின் ஒரு பெரும் பிரிவினருக்குப் பயனளிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
“பாரத் இனோவேட்ஸ் நிகழ்வு, உலகளாவிய புத்தாக்கத்தின் அடுத்த அத்தியாயத்தை இந்தியாவுடன் இணைந்து உருவாக்க உலகிற்கு விடுக்கப்படும் ஓர் அழைப்பாகும்,” என்றார் திரு மோடி.
பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், சுலோவாக்கியாவுக்கு ஒருவார கால அரசுமுறைப் பயணத்தை சனிக்கிழமை தொடங்கினார்.
தொடக்கமாக, பிரான்சில் மத்திய தரைக் கடலையொட்டி அமைந்துள்ள துறைமுக நகரான நீஸ் வந்தடைந்தார் அவர். விமான நிலையத்திலும் ஹோட்டலிலும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளின் முன்னணி புத்தாக்க நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘பாரத் இனோவேட்ஸ்’ நிகழ்வை நீஸ் நகரில் பிரதமர் மோடியும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மேக்ரோனும் ஞாயிற்றுக்கிழமை கூட்டாகத் தொடங்கிவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் உயர்நிலைப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு நாடுகளின் நலன் சார்ந்த வட்டார, அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் அவர்கள் தங்களது கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவு, தற்காப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்புஉறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதிபூண்டனர்.
அவர்களின் சந்திப்பு தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தியாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “இந்தியா-பிரான்ஸ் இடையிலான வலுவான ஒத்துழைப்பு அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. உலகளாவிய சிறப்பு உத்திபூர்வ ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடியும் அதிபர் மேக்ரோனும் விரிவாக ஆலோசித்தனர்.
“புத்தாக்கம், வர்த்தகம், முதலீடு, நிலையான வளர்ச்சி, தற்காப்பு, கலாசாரம், மக்களுக்கு இடையிலான தொடர்புகளின் மேம்பாடு போன்றவை குறித்து இருவரும் விவாதித்தனர்,” என்று ஜெய்ஸ்வால் விளக்கினார்.
இந்தியா-பிரான்ஸ் இருதரப்பு வா்த்தக மதிப்பு கடந்த 2025-26 நிதியாண்டில் US$15.81 பில்லியன். முந்தைய ஆண்டில் அது US$15.19 பில்லியனாக இருந்தது.
கடந்த 2000 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரை பிரான்சிலிருந்து இந்தியாவுக்கு US$12.25 பில்லியன் மதிப்புள்ள அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. அதன்மூலம் இந்தியாவின் 11ஆவது பெரிய முதலீட்டாளராக பிரான்ஸ் உள்ளது.

