கரக்பூர்: ஒரு தேசம் தனக்கு முன்னால் இருக்கும் தடைகளைத் தகர்த்து, புதிய வாய்ப்புகளை வெளிக்கொணரும்போதுதான் தனது உண்மையான ஆற்றலை உணர்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனது எல்லைகளைத் தகர்த்து, புதிய சாத்தியக்கூறுகளைத் திறக்கும் வல்லமை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கரக்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) 75வது ஆண்டு விழா சனிக்கிழமை (நவம்பர் 21) விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சி, இளையர்களின் பங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
கடந்த 12 ஆண்டுகளில், இந்திய அரசு பழைய தடைகளை உடைக்கவும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அயராது பாடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 12-13 ஆண்டுகளில் இந்தியாவில் ஏறக்குறைய 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகக் குறிப்பிட்ட திரு மோடி, நாட்டின் அணுகுமுறையிலும் சிந்தனையிலும் ஏற்பட்ட மாபெரும் மாற்றமே இதற்குக் காரணம் என்றார்.
மேற்கு வங்கம், கருத்துகள் வலிமை பெற்று, தேசிய இயக்கங்கள் வடிவம் பெற்ற புண்ணிய பூமி என்றும் கரக்பூர் ஐஐடி அமைந்துள்ள பகுதி, முன்பு சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறை முகாம்களுள் ஒன்றாக இருந்தது என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.
கடந்த பத்தாண்டுகளில் ஐஐடி கரக்பூர் பல வரலாற்று மைல்கற்களை எட்டியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவும் முன்னேற்றம் கண்டுள்ளதைத் தெரிவித்தார்.
“மாட்டு வண்டிப் பயணம் மேற்கொண்ட காலத்திலிருந்து அதிவேக புல்லட் ரயில்கள் வரையிலும் தபால் கடிதங்களுக்காகக் காத்திருந்த நிலையிலிருந்து நொடியில் தகவல்களைப் பரிமாறும் சமூக ஊடகங்கள் வரையிலும் இந்தியா மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது,” என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
