புயல்களால் ஏற்படும் இழப்புகளை வெகுவாகக் குறைத்த இந்தியா

2 mins read
80c2494a-1db3-4b30-84a5-912303ef09a8
பிரதமர் மோடி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் நாட்டின் அறிவியல் முன்னேற்றுத்துக்கான அடையாளமாக மாறியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் எண்ணற்ற புயல்கள் உருவானபோதிலும், அவற்றால் ஏற்படும் உயிர் இழப்புகளை இந்தியா வெகுவாகக் குறைத்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150வது நிறுவன தினக் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, இம்மையத்தின் விழாவானது இந்தியாவின் நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க பயணத்தையும் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.

கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக வானிலை ஆய்வு மையம், லட்சக்கணக்கான இந்தியர்களுக்குச் சேவையாற்றி உள்ளதாக தெரிவித்த அவர், வானிலை ஆராய்ச்சியில் இளையர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் தேசிய வானிலை ஒலிம்பியாட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அறிவியல் முன்னேற்றம் என்பது புதிய உயரங்களை எட்டுவதில் மட்டுமல்லாமல், சாதாரண மனிதனின் வாழ்க்கையை எளிதாக்குவதிலும் உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

துல்லியமான வானிலைத் தகவல்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னேறி உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

“அண்மைய ஆண்டுகளில் எண்ணற்ற பெரிய புயல்கள், பேரிடர்கள் வந்தபோதிலும், இந்தியா உயிரிழப்புகளை வெற்றிகரமாக குறைத்துள்ளது அல்லது இல்லாமல் செய்துள்ளது.

“அறிவியல் தயார்நிலை நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் பில்லியன் கணக்கான பொருளியல் இழப்புகளையும் இந்தியா குறைத்துள்ளது.

“முன்பெல்லாம் மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது லட்சக்கணக்கான மீனவர்களின் குடும்பங்கள் கவலையடைந்தனர். ஆனால் இப்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஒத்துழைப்புடன் மீனவர்களுக்கு சரியான நேரத்தில் வானிலை எச்சரிக்கை தகவல் விடுக்கப்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது,” என்று பிரதமர் மோடி மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்