புதுடெல்லி: இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
எளிமையான பின்புலத்தில் இருந்து முன்னேறி மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தவர் மன்மோகன் சிங் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்
“காலஞ்சென்ற பிரதமர் மன்மோகன்சிங் நிதியமைச்சர் உள்பட, பல்வேறு அரசாங்கப் பதவிகளிலும் பணியாற்றினார்.
“பல ஆண்டுகளாக இந்திய பொருளாதாரக் கொள்கையில் ஆழமான தடம் பதித்தவர். நாடாளுமன்றத்தில் அவரது குறுக்கீடுகளும் அற்புதமானவையாக இருந்தன.
“சாமானிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்,” எனப் பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி, நிர்வாகம் ஆகிய இரு துறைகளையும், எளிமையாக கையாண்ட அரிதான தலைவர் மன்மோகன் சிங் என்று இந்திய அதிபர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
“இந்திய பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முக்கிய பங்களிப்பு அளித்தவர். நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை, எளிமை, மனிதாபிமான பண்பு, அரசியல் வாழ்க்கை ஆகியவற்றிற்காக மக்கள் மனதில் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவார்,” என்று அதிபர் முர்மு மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, திரு மன்மோகன் சிங் பேரறிவுடனும் நேர்மையுடனும் இந்தியாவை வழிநடத்தியதாக ராகுல்காந்தி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“அவரது பணிவும் பொருளியல் குறித்த ஆழமான புரிதலும் நாட்டை ஊக்கப்படுத்தியது.
“ஒரு வழிகாட்டியை, குருவை இழந்துவிட்டேன். அவரைப் போற்றிப் பாராட்டிய கோடிக்கணக்கான மக்கள் அவரை மிகவும் பெருமையுடன் நினைவுகூர்வர்,” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரசின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “மன்மோகன்சிங் மறைவால், தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதியையும் மாசற்ற நேர்மையான தலைவரையும், ஈடு இணையற்ற மதிப்பு கொண்ட பொருளாதார வல்லுநரையும் இந்தியா இழந்துவிட்டது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளியல் மாற்றத்தை வழிநடத்திச் சென்றது என்றும் அவரது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையில் நிலையான வளர்ச்சி, சமூக மேம்பாடு, சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் நல்ல மனிதர் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார நிபுணர் என்றும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்இரேன் என்றும் குறிப்பிட்டார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், மன்மோகன் சிங் கொண்டு வந்த நிதி சீர்திருத்தங்கள் பரவலான ஏற்பைப் பெற்றவை எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.