புதுடெல்லி: தனது தயாரிப்பில் உருவான ஆயுதங்களை சோதனை செய்து பார்க்கும் களமாக பாகிஸ்தானை சீனா பயன்படுத்தி வருகிறது என்று இந்திய ராணுவ துணை தலைமைத் தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ துணை தலைமை தளபதி ராகுல் ஆர். உரையாற்றினார்.
அதில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவை எவ்வாறு செயல்பட்டது என்பது முக்கியம் என்றார். நமக்கு எல்லை ஒன்று தான். ஆனால் எதிரிகள் மூன்று பேர் இருந்தனர். தான் தயாரிக்கும் ஆயுதங்களை சோதனை செய்து பார்க்கும் களமாக பாகிஸ்தானை சீனா பயன்படுத்தி வருகிறது என்று அவர் விளக்கினார்.
பாகிஸ்தானின் மொத்த ஆயுதங்களில் 81 விழுக்காடு ஆயுதங்கள் சீனா வழங்கியது. துருக்கியும் பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. ராணுவத்துக்கு ஒரு வலுவான வான் பாதுகாப்பு அமைப்பு தேவை என்று அவர் சொன்னார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் உளவுத் தகவல்கள் மூலமாகவும் பாகிஸ்தானில் 21 பயங்கரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் ஒன்பது தாக்கி அழிக்கப்பட்டன.
நாம் ஒரு ராணுவ இலக்கை அடையும்போது அதை நிறுத்தும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும். போரைத் தொடங்குவது எளிது. ஆனால், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். எனவே அது மிகவும் திறமையான தாக்குதல் என்று அவர் கூறினார். சரியான நேரத்தில் போரை நிறுத்த வேண்டும். இந்திய ராணுவம், அனைத்து வழிமுறைகளிலும் போரை எதிர்கொள்ளத் தயாராக இருந்தாக வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.