ராய்ப்பூர்: உலக அரங்கில் ஏற்பட்ட பல்வேறு பொருளியல், அரசியல் ரீதியான அதிர்வுகளை இந்தியா மிக வலுவாகக் கடந்து வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 4) நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியபோது, “உள்நாட்டு, வெளிநாட்டுச் சவால்களைத் திறம்படக் கையாண்டதன் மூலம், இன்று உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளியல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
“ஒருகாலத்தில் உலகமயமாக்கல் பற்றி பேசிய வளர்ந்த நாடுகளே இன்று தற்சார்பு நிலையை நோக்கி நகர்கின்றன. இதையே பிரதமர் மோடி ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் மூலம் முன்னெடுத்து வருகிறார்.
மூன்று சவால்கள்
“கொரோனா பெருந்தொற்று, உலகளாவிய போர்கள், பருவநிலை மாற்றம் ஆகிய மூன்று முக்கியக் காரணிகள் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளன.
“தொலைதூரத்தில் நடக்கும் போர்கள்கூட இன்று நம் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் அளவிற்கு உலகமயமாக்கல் வேரூன்றியுள்ளது.
“இந்தியாவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை, இந்தியப் பொருள்களுக்கான தேவை அனைத்துலகச் சந்தைகளில் அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதிலும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.
“குறிப்பாக, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு இக்கட்டான நேரங்களில் துணை நிற்பதே இந்தியாவின் முக்கிய நோக்கம்,” என்று தெரிவித்தார்.

