புதுடெல்லி: அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வெனிசுவேலாவிலிருந்து இரண்டு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
தற்போது அந்தக் கச்சா எண்ணெய் பேரல்கள், மூன்று பெரிய சரக்குக் கப்பல்கள் மூலம் விரைவில் இந்தியாவிற்குச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ரிலையன்ஸ், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹெச்பிசிஎல் மிட்டல் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் வெனிசுவேலாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கத் தொடங்கியுள்ளன.
வெனிசுவேலாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியா போன்ற உலக நாடுகளுக்கு அமெரிக்காவின் கண்காணிப்பில் எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்காக, இந்தியாமீது கூடுதல் வரிகளையும் அவர் விதித்தார்.
அதன்பின்னர் இந்தியப் பிரதமர் மோடி அதிபர் டிரம்ப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தையில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்க் கொள்முதலை குறைத்துக் கொள்ள இந்தியா ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா கூறுகிறது.
அதேபோல் வெனிசுவேலாவிடமிருந்து கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்ய இந்தியா சம்மதம் தெரிவித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
2019ஆம் ஆண்டு வெனிசுவேலாவின் எண்ணெய்யை வாங்கக்கூடாது என்று அமெரிக்கா தடை விதித்தது.
அந்தக் காலகட்டத்தில் கச்சா எண்ணெய்யை வாங்கும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருந்தது. தற்போது அது மீண்டும் எண்ணெய் கொள்முதலை துவக்கியுள்ளது.

