புதுடெல்லி: இந்தியாவில் 2040ஆம் ஆண்டுக்குள் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தொட்டுவிடும் அபாயம் இருப்பதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மேலவையில் கேள்வி நேரத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், உலக அளவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில், இந்தியா மூன்றாம் இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
முதல் இரு இடங்களில் சீனாவும் அமெரிக்காவும் இருக்கும் நிலையில், இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“புற்றுநோய் போன்ற தொற்று அல்லாத நோய்கள் ஒருவரின் வாழ்நாளின் நடுப்பகுதி அல்லது இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட நிலை மாறி, வாழ்நாளின் ஆரம்பக்கட்டத்திலேயே அதுபோன்ற நோய்களின் தாக்கம் தொடங்கி விடுகிறது.
“உலகம் முழுவதுமே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக 20 மில்லியன் உலகமக்களை புற்றுநோய் பாதிக்கிறது.
“இந்தியாவில் பல்வேறு காரணங்களால் புற்றுநோய் அதிகரிக்கும் தற்போதைய வேளையில், 60 வயதைக் கடந்த முதியோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
“இது பல்வேறு நோய்களால் அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய ஒட்டுமொத்த சுமையை அதிகரித்துள்ளது.
“தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் 1.5 மில்லியன் புற்றுநோயாளிகள் உள்ளனர். இது இன்னும் 15 ஆண்டுகளில் 2 மில்லியனைத் (20 லட்சம்) தொட்டுவிடும் என கணிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“பருவநிலை மாற்றங்கள், வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக இந்த நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது.
“1980கள் வரை தொற்றுநோய்களால் இந்தியா பாதிக்கப்பட்ட நிலையில் பின்னர், தொற்றுநோய் அல்லாத நோய்களால் பாதிக்கப்பட்டது. தற்போது அந்த இரண்டுமே இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.
“புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதற்கு, மக்கள்தொகையும் வயதும் முக்கிய பங்கு வகிப்பதாக, புற்றுநோய் தடுப்புக்கான ஆசிய, பசிபிக் சஞ்சிகையின் தரவுகள் தெரிவித்துள்ளன.
“பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்புக்காக எச்பிவி தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. அது மலிவு விலையிலேயோ இலவசமாகவோ மக்களுக்கு கிடைக்க அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது,” என்று ஜிதேந்திர சிங் தமது பதிலில் விளக்கினார்.

