புதுடெல்லி: பெரும்பாலான இந்தியக் குடும்பங்களுக்குச் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது அல்லது வாங்குவதே பெருங்கனவாக இருந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பிச் செலுத்தவேண்டிய தனிநபர் வீட்டுக் கடன் தொகை கடந்த பத்தாண்டுகளில் மும்மடங்காக உயர்ந்துவிட்டதை 2025-26 பொருளியல் ஆய்வறிக்கைத் தரவுகள் காட்டுகின்றன.
2015 மார்ச் முடிவில் ரூ.10 லட்சம் கோடியாக (S$1,377.8 பில்லியன்) இருந்த அத்தொகை, 2025 மார்ச் முடிவில் ரூ.37 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது.
இதன் விளைவாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீட்டுக் கடனின் பங்கு எட்டு விழுக்காட்டிலிருந்து 11 விழுக்காடாக அதிகரித்துவிட்டது.
சொந்த வீட்டிற்காக முறையாகக் கடன் பெற்று, அதை நீண்டகால அடிப்படையில் திருப்பிச் செலுத்தும் வகையில் பல குடும்பங்கள் திட்டமிட்டுச் செயல்படுவதை இது காட்டுகிறது.
அதிகரித்துவரும் வீட்டு விலைகளை மட்டுமன்றி, சொத்து உருவாக்கத்திலும் குடும்பங்கள் கவனம் செலுத்துவதை இது குறிப்பிடுகிறது.
குறுகியகால தனிநபர் கடன்களைப் போலன்றி, வீட்டுக்கடன்கள் வழக்கமாக 15-25 ஆண்டுகளுக்கு நீடிக்கின்றன. இதனால், கடன் வாங்கியவர்கள் வருமானம், சேமிப்பு, செலவு ஆகியவை தொடர்பில் திட்டமிட்டுச் செயல்பட வேண்டியிருக்கிறது.
முன்பு சேமிப்பு, குடும்பத்தின் பணம், முறைசாராக் கடன் ஆகியவற்றைக் கொண்டு வீடு வாங்குவது அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது நீண்டகாலத்திற்குத் திருப்பிச் செலுத்தும் வகையில், தவணை முறையில் கடன் பெற்று வீடு வாங்கும் போக்கு கூடியுள்ளது.

