மலேசியாவுடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை நடத்தும் இந்தியா

1 mins read
14e26bde-47b2-478e-87af-9f3f31665e75
ஆசியான் உறுப்பு நாடுகளின் பாதுகாப்புப் படைகளின் கள அனுபவங்களும் இந்த மாநாட்டில் பகிா்ந்துகொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. - கோப்புப்படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள்-பிளஸ் (ADMM-Plus) வல்லுநர் பணிக்குழுவின் 14வது சந்திப்பு, மார்ச் 19ஆம் தேதி புதுடெல்லியில் தொடங்கவிருக்கிறது.

இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டை மலேசியாவுடன் இணைந்து இந்தியா நடத்தவுள்ளது.

ஆசியான் நாடுகளான புருணை, கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியட்னாம் ஆகியவையும் அந்த அமைப்பின் கலந்துரையாடல் பங்காளித்துவ உறுப்பினா்களான இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கவுள்ளனா்.

இந்த மாநாட்டை இந்தியா இணைந்து தலைமையேற்று நடத்துவது இதுவே முதல் முறை என அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.

2024-27ஆம் ஆண்டுக்கான பயங்கரவாத எதிா்ப்பு செயல் திட்டத்தை வகுப்பதற்கான முதல்கூட்டமாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

அதன் தொடக்க விழாவில் இந்தியத் தற்காப்புச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் உரை ஆற்றவுள்ளாா்.

வட்டாரப் பாதுகாப்புச் சூழலுக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் பற்றியும் அதை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் அச்சுறுத்தல்களைத் திறம்பட கையாள்வதற்கு விரிவான திட்டத்தை வகுப்பது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும், ஆசியான் உறுப்பு நாடுகளின் பாதுகாப்புப் படைகளின் கள அனுபவங்களும் இந்த மாநாட்டில் பகிா்ந்துகொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்புப் பயிற்சிகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், செயல் திட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்தியத் தற்காப்பு அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்