புதுடெல்லி: இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் தென்னுலக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டில் இஸ்ரேல் உள்ளிட்ட உலக நாடுகள் பங்கேற்கின்றன.
தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 16 முதல் 20 வரையில் நடைபெறும் இம்மாநாடு, ஏஐ உலகில் இந்தியா கோலோச்சுவதற்கான முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, விரைவாக வளர்ந்து வருவதும், உலக விவகாரங்களில் செல்வாக்குமிக்க பொருளியலாக திகழும் இந்தியாவில் இந்த மாநாடு நடைபெறுவதும் மிகவும் பொருத்தமானது என்று புகழாரம் சூட்டியிருக்கிறது ஐக்கிய நாடுகள் அமைப்பு.
இது குறித்து அளித்த சிறப்பு நேர்காணலில் ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ‘‘செயற்கை நுண்ணறிவு, வளர்ந்த நாடுகளுக்கோ, சில வல்லரசுகளுக்கோ மட்டும் பயனளிக்கும் வகையில் இருக்கக் கூடாது.
‘‘உலகம் முழுவதற்கும் பலன் அளிக்க வேண்டும். உலகின் தென்பகுதியில் உள்ள நாடுகளுக்கும் ஏஐ பலன் நிறைவாகக் கிடைக்க வேண்டும். அவ்வகையில், உலக நாடுகள் பலவும் பங்கேற்கும் வகையில் இந்த மாநாட்டை ஒருங்கிணைத்த இந்தியாவை உளமாரப் பாரட்டுகிறேன்,’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டிற்கு வரும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று இஸ்ரேல், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், இலங்கை, ஃபின்லாந்து, கிரீஸ் உள்பட உலகின் பல்வேறு நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் இஸ்ரேல், இந்தியாவுடனான தொழில்நுட்ப உறவுகளை, செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருளியலை மேம்படுத்தும் விருப்பத்துடன் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் குழுவில் மூத்த அரசு அதிகாரிகள், தொழில்நுட்பத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வல்லுநர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இத்திட்டம் குறித்து இந்திய ஊடகங்களிடம் பேசினார் ‘இந்திய ஏஐ மிஷன்’ மற்றும் உச்சி மாநாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங்.
உலகளாவிய ஏஐ விவாதத்தை உயரடுக்கு ஆய்வகங்கள் மற்றும் பெருநிறுவன அறைகளிலிருந்து விலக்கி, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக மாற்றுவதே முக்கிய குறிக்கோள் என்றார் அவர்.
‘‘இந்த மாநாடு, கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது அன்று. ஆதார், யூபிஐ, டிஜிலாக்கர் போன்ற மின்னிலக்கத் திட்டங்கள் வாயிலாக மில்லியன்கணக்கான மக்களைச் சென்றடைய முடியும் என்று இந்தியா நடைமுறைப்படுத்திய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது,’’என்று சிங் கூறினார்.
பொதுச் சேவைகளை நேர்த்தியாக வழங்க தொழில்நுட்பத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதில் இந்தியா திறம்படச் செயல்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட திரு சிங், தென்வட்டாரத்தின் உலகளாவிய குரலாக இருக்க இந்தியா விரும்புகிறது என்றும் சொன்னார்.

