தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா: ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரூ.32,000 கோடி முதலீடு செய்ய திட்டம்

1 mins read
7415351c-a6df-4bc6-baf1-675ee869242f
படம்: - ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த பத்து ஆண்டுகளில் ரூ.32,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதல் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு (IPO) முன்பு இத்தகைய அறிவிப்பை வெளியிடுவது முதலீட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கை அளிக்கும் என்றும் இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய பொதுப்பங்கு வெளியீடு தோல்வியடைவதைத் தடுக்க முடியும் என்றும் ஹூண்டாய் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளர்களில் ஒன்று ஹூண்டாய் மோட்டார். இந்நிறுவனம் அக்டோபர் 15ஆம் தேதி ரூ.27,870 கோடி மதிப்பிலான நாட்டின் மிகப்பெரிய ஐபிஓவைவெளியிட உள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு எல்ஐசி, பேடிஎம் போன்ற நிறுவனங்கள் வெளியிட்ட பெரியளவிலான ஐபிஓக்கள் தோல்வியடைந்தன.

இந்நிலையில்தான் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது பொதுப்பங்கு வெளியீட்டை வெற்றிகரமானதாக மாற்ற ரூ.32,000 கோடி மதிப்பிலான மாபெரும் முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. சென்னையில் செயல்படும் அதன் தொழிற்சாலையில் மின்சார வாகன உற்பத்தித் திறன்களை விரிவுபடுத்தவும் மின்கலன் ஆலையை நிறுவவும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என அது தெரிவித்தது.

கூடுதலாக, புனேயில் புதிய தொழிற்சாலை ஒன்றை ரூ.6,000 கோடி செலவில் அமைக்கவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

இந்த முதலீட்டின் மூலம் அதன் உற்பத்தித் திறனை 0.824 மில்லியன் வாகனங்களில் இருந்து 1.1 மில்லியன் வாகனங்களாக அதிகரிக்க முடியும். மேலும், இந்த திறன் விரிவாக்கம் தேசிய மற்றும் ஏற்றுமதி விற்பனையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்