பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வரியின்றி சர்க்கரை இறக்குமதி செய்யும் இந்தியா

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வரியின்றி சர்க்கரை இறக்குமதி செய்யும் இந்தியா

2 mins read
89f112b3-92ea-4167-8be4-915bb44c3c35
இந்தியாவின் அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்துலகச் சந்தையில் சர்க்கரை விலை 4 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: நாடு முழுவதும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டும் உள்ளூர்ச் சந்தையில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் 10 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்ய இந்திய வர்த்தக அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்திய உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரையின் விலை சுமார் 40 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. கரும்பு உற்பத்தி குறைவு காரணமாக சந்தையில் சர்க்கரை வரத்து சரிந்ததே இந்த அதிரடி விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்தியா சர்க்கரையை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்துலகச் சந்தையில் சர்க்கரை விலை 4 விழுக்காடு வரை உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டில் வரத்து அதிகரித்து விலையேற்றம் விரைவில் கட்டுக்குள் வரும் என வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கு 100 விழுக்காடு சுங்க வரி விதிக்கப்படும் நிலையில், தற்போது சர்க்கரை விலையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு இந்த வரி விலக்குச் சலுகையை அறிவித்துள்ளது.

இந்த உத்தரவின்படி, வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை சர்க்கரை ஆலைகளும் சுத்திகரிப்பு நிறுவனங்களும் வரியின்றி சர்க்கரையை இறக்குமதி செய்து கொள்ள முடியும்.

பண்டிகைக் காலத்தில் இனிப்பு வகைகளுக்கான தேவை பெருமளவில் அதிகரிக்கும் என்பதால், இந்த நடவடிக்கை மக்கள் மீதான பொருளியல் சுமையைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இறக்குமதி செய்ய விருப்பமுள்ள ஆலைகள் ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 28 வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 15க்குள் இறக்குமதியை முழுமையாக முடிக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்