தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா: பருத்தி மீதான இறக்குமதி வரி தற்காலிகமாக நீக்கம்

1 mins read
c92e2ac2-5d70-453a-ae67-f98b6091eab5
தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டுவரும் இந்திய ஆடைத் துறைக்கு அமெரிக்காவின் 50% இறக்குமதி வரிவிதிப்பு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. - படம்: இபிஏ

புதுடெல்லி: வரும் செப்டம்பர் 30ஆம் தேதிவரைக்கும் பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு இந்திய அரசு தற்காலிக விலக்கு அளித்துள்ளது.

இந்த அறிவிப்பானது ஆடைத் துறைக்குச் சற்று நிம்மதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா 50 விழுக்காடு வரி விதித்துள்ளதால் ஆடைத் துறை அதிகம் பாதிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, ஆடைத் துறை சார்ந்த தொழில் அமைப்புகள், பருத்தி மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்றும் அது தாங்கள் அதிக போட்டித்தன்மையுடன் விளங்க கைகொடுக்கும் என்றும் இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தன.

மத்திய அரசின் தற்காலிக வரிவிலக்கு அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) முதல் நடப்பிற்கு வந்தது. இதற்குமுன், பருத்திக்கு 11 விழுக்காடு இறக்குமதி வரி வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்குப் பிறகும் பருத்திக்கான இறக்குமதி வரிவிலக்கை இந்திய அரசு நீட்டிக்கும் என்றும் தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

அமெரிக்காவின் வரிவிதிப்பை அடுத்து, அதிலிருந்து தப்பிக்க தயாரிப்புப் பணிகளை வெளிநாடுகளுக்கு மாற்றலாமா என இந்திய ஏற்றுமதியாளர்கள் சிலர் யோசித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது.

இந்திய ஆடைத் துறை தொழிலாளர் பற்றாக்குறையாலும் தவித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

வரும் 2030ஆம் ஆண்டிற்குள் ஆடை ஏற்றுமதியை 100 பில்லியன் அமெரிக்க டாலராக (S$128 பில்லியன்) உயர்த்த இந்தியா இலக்கு கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்