உள்நாட்டுத் தேவையைச் சமாளிக்க 48 நாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி

1 mins read
5a1430a0-7eb7-4137-879e-4e0aa9cf0f32
ஆசியான் நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் தங்கத்திற்கு வரி இல்லை. - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியா 2023-24 நிதி ஆண்டில் 48 நாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்ததாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வர்த்தக, தொழில் இணை அமைச்சர் ஜிதின் பிரசாத், வெள்ளிக்கிழமை (மார்ச் 28) மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூர்வமான பதிலில் தங்கம் இறக்குமதி தொடர்பான பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்திற்கு வெவ்வேறு நாடுகளிடம் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் இறக்குமதி வரி செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மிகவும் விருப்பத்துக்குரிய நாடு (MFN) அல்லது தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின்கீழ் (FTA) தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை இந்தியா விதிக்கிறது.

மிகவும் விருப்பத்துக்குரிய நாடு என்ற அடிப்படையில் தங்கக் கட்டிகளுக்கு 6 விழுக்காடும் சுத்திகரிக்கப்படாத தங்கத்திற்கு 5.35 விழுக்காடும் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

ஆசியான் நாடுகள், தென்கொரியா, ஜப்பான் மற்றும் மலேசியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்தின்கீழ் அதுபோன்ற நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் தங்கத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லை

உள்நாட்டுத் தேவைகள், பொருளியல் சூழல் ஆகியன உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில்கொண்டு தங்கத்தின் மீதான வரியைக் குறைப்பது குறித்து பிற நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டதாக திரு நிதின் பிரசாத் தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்