மங்களூர்: கொவிட்-19 தொற்று நெருக்கடிக்குப் பின் இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரித்துள்ளது. அதேபோல் இந்திய நாட்டவர் அதிகமானோர் வெளிநாடுகளுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வருவதாக இந்திய சுற்றுலாத்துறை அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2019ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்குச் சுற்றுலாப் பயணம் செல்லும் இந்திய நாட்டவர் எண்ணிக்கை 26.9 மில்லியனாக இருந்தது அது கடந்த 2024ஆம் ஆண்டில் 30.8 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதேபோல் வெளிநாட்டவர் இந்தியாவுக்கு வருவதும் கணிசமாக அதிகரித்துள்ளது.
அந்தத் தரவுகளின்படி இந்தியாவுக்கு கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் 9.95 மில்லியன் வெளிநாட்டவர் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது 2022ல் 6.44 மில்லியனாகவும் 2019ல் 109,000 ஆக இருந்தது.
2024ஆம் ஆண்டில் 7.78 மில்லியன் இந்தியர்கள் அரபு நாடுகளுக்குச் சென்று வந்துள்ளனர். அடுத்தபடியாக 2.14 மில்லியன் பேர் அமெரிக்கா சென்று வந்துள்ளனர். அதே ஆண்டில், அமெரிக்காவில் இருந்து 1.80 மில்லியன் பேர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
கொவிட்-19 நெருக்கடிக்குப் பின்னர் இந்தியாவுக்குச் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டு வருவோர் எண்ணிக்கையும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திரா சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

