பகுதி மின்கடத்தித் துறையில் கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா-இந்தோனீசியா இணக்கம்

பகுதி மின்கடத்தித் துறையில் கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா-இந்தோனீசியா இணக்கம்

2 mins read
c1d3e144-2e01-484a-9d1f-d7a56cdcf5fb
இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் சுகியோனோ (இடம்), இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர். - படம்: எக்ஸ்/எஸ்.ஜெய்சங்கர்
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை’ (Act East Policy)யின் முக்கியத் தூணாக இந்தோனீசியா விளங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் சுகியோனோ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆழமான நாகரிகத் தொடர்புகளில் வேரூன்றிய இந்தியா, இந்தோனீசியா இடையேயான விரிவான உத்திபூர்வ பங்காளித்துவம், தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மேலும், இருதரப்பு உறவானது வட்டார வளர்ச்சிக்கும், இந்தியா - ஆசியான் உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என இரு நாட்டு அமைச்சர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இருதரப்புக்கும் இடையே புதுடெல்லியில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், தற்காப்பு, கடல்சார் வணிகம், கப்பல் போக்குவரத்து போன்ற பாரம்பரிய துறைகள் மட்டுமின்றி, வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளான பகுதி மின்கடத்தி, நிதித் தொழில்நுட்பம், விண்வெளி, மின்னிலக்கக் கூட்டுறவு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, பகுதி மின்கடத்தி, தற்காப்புத்துறை ஆகியன குறித்து விரிவாகப் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும், மருந்து தயாரிப்பு, முக்கியமான தாதுக்கள், உரம், உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக இந்த உயர்மட்டச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

“கடந்த 2025 ஜனவரியில் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ இந்தியாவுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வப் பயணத்தின்போது நடைபெற்ற கலந்துரையாடல்கள் இருதரப்பு உறவுகளுக்குப் புத்துயிர் அளித்தன.

“இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிப் பாதையை இரு தலைவர்களும் வரவேற்றதுடன், அடுத்த கூட்டுக்குழுக் கூட்டத்தை எதிர்காலத்தில் இருதரப்புக்கும் வசதியான ஒரு தேதியில் கூட்டவும் ஒப்புக்கொண்டனர்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

முன்னதாக, இந்தியப் பிரதமரின் இந்தோனீசியப் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக திரு சுகியோனோ தெரிவித்தார்.

“இந்தப் பயணம் நமது ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும் நம் மக்களுக்கு உறுதியான பலன்களை வழங்கவும் நல்வாய்ப்பாக அமையும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
இந்தோனீசியாவெளியுறவு அமைச்சுஅமைச்சர்ஆசியான்பங்காளித்துவம்வளர்ச்சிபகுதி மின்கடத்திதற்காப்புபிரபோவோ சுபியாந்தோ