சண்டிகர்: கனடாவை உலுக்கிய, ரூ.173 கோடி பெறுமானமுள்ள தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி, சண்டிகரில் அப்பாவியாக வாழ்ந்துவரும் அதிர்ச்சி தகவலை இந்திய ஊடகம் வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜுரிச்சிலிருந்து, கனடாவின் டெரோன்டாவுக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வந்த ஏர் கனடா சரக்கு விமானம் ஒன்றில், ரூ. 173 கோடி மதிப்பிலான 400 கிலோ தங்கமும் 22 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்களும் வந்தன.
இவற்றை போலி ஆவணங்களைக் கொடுத்து, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கனடாவை உலுக்கிய இக்கொள்ளைச் சம்பவத்தை அந்நாட்டுக் காவல்துறை விசாரித்து வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், ஏர் கனடா விமான நிறுவன ஊழியர்கள் உட்பட ஒன்பது பேருக்கு இக்கொள்ளையில் நேரடி தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பரம்பால் சித்து, பிரசாத் உட்பட ஆறு பேர் கடந்த ஆண்டு கைதாகினர்.
சம்பவத்தின்போது ஏர் கனடா மேலாளராக இருந்த 32 வயது சிம்ரன் ப்ரீத் பனேசர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர் கனடாவில் இருந்து தப்பிவிட்டார்.
இந்நிலையில், தற்போது அவர், இந்தியாவின் சண்டிகரில் வசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அவர் வாழ்ந்துவருவதாகக் கூறப்படுகிறது.
சிம்ரன் ப்ரீத் பனேசரின் மனைவி ப்ரீத்தி பனேசர், ‘மிஸ் இந்தியா உகாண்டா’ பட்டம் பெற்ற அழகி எனச் சொல்லப்படுகிறது. கொள்ளை வழக்கு குற்றவாளி சிம்ரன் ப்ரீத் குறித்து கனடா காவல்துறைக்கு விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் எனச் சண்டிகர் காவல்துறை தெரிவித்துள்ளது.