தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போயிங்-787 விமானங்களை ஆய்விற்குட்படுத்தும் இந்தியா

1 mins read
c913e54b-1f8e-4bc7-87a3-406d795230a3
விபத்துக்குள்ளான விமானத்தை ஆராயும் அதிகாரிகள். - படம்: இபிஏ

புதுடெல்லி: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, இதுவரை எட்டு போயிங்-787 டிரீம்லைனர் வகை விமானங்களை ஆய்விற்கு உட்படுத்தியுள்ளதாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சிரப்பு ராம் மோகன் நாயுடு சனிக்கிழமையன்று (ஜூன் 14) தெரிவித்தார்.

தற்போது இந்தியா வசமுள்ள 34 டிரீம்லைனர் விமானங்களையும் முழுமையாக ஆய்விற்கு உட்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

“787 வகை விமானங்களை விரிவான ஆய்விற்குட்படுத்த பொது விமானப் போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை எட்டு விமானங்கள் சோதிக்கப்பட்டுவிட்டன,” என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறினார்

“ஏஐ171 விமான விபத்தை அமைச்சு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அவ்விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது,” என்றும் அவர் சொன்னார்.

மேலும், விமான விபத்து குறித்த விசாரணையை வலுப்படுத்தும் வகையில், விமான விபத்து புலனாய்வுக் குழுவானது தடயவியல், மருத்துவப் பகுப்பாய்வுத் துறைகளைச் சேர்ந்த இரு வல்லுநர்களை விசாரணைக் குழுவில் சேர்த்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய பொது விமான அமைச்சகத்தில் சனிக்கிழமை காலை அமைச்சர் நாயுடு தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அதில், விமானப் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு, மறுமதிப்பீடு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

பொது விமானத்துறை இயக்ககம் மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணைக்குழு அதிகாரிகளும் உரிய பங்காளிகளும் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்