இந்தியா: அனைத்துலக விமானங்களுக்கு ஆகஸ்ட் இறுதி வரை தடை நீட்டிப்பு

இந்தியா: அனைத்துலக விமானங்களுக்கு ஆகஸ்ட் இறுதி வரை தடை நீட்டிப்பு

1 mins read
541cfaf6-cc69-4843-ae26-0248e42cc53a
படம்: AirlineGeeks -

புதுடெல்லி: கொவிட்-19 கிருமித்தொற்றின் அதிகரிப்பு காரணமாக அனைத்துலக பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடை வரும் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய விமானப்போக்குவரத்து பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலால் கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் இந்தியாவின் அனைத்துலக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

அதே சமயம் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை நாடு கொண்டுவரவும், உள்நாட்டில் சிக்கிய வெளிநாட்டினரை தாயகத்திற்கு அனுப்பவும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மே மாதத்திலிருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும் தொடர்ந்து திட்டமிடப்பட்ட அனைத்துலக பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்துலக பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடை இன்று ஜூலை 31 உடன் முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருப்பதால் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.

அதேசமயம் தேவையின் அடிப்படையில் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் திட்டமிடப்பட்ட அனைத்துலக பயணிகள் விமானச் சேவை அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் டிஜிசிஏ குறிப்பிட்டது.

சரக்கு விமானங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது.

அனைத்துலக பயணத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், வெளிநாடுகளில் சிக்கி உள்ள குடிமக்களை திருப்பி அனுப்ப சில விமானங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.