புதுடெல்லி: சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை வழங்குவதாகக் கூறும் விளம்பரங்கள் இந்தியாவில் அடிக்கடி காணப்படுவது வழக்கம்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பாத்திரம் கழுவும் திரவம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டடங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக அத்தகைய விளம்பரங்களில் குறிப்பிடப்படும்.
ஆனால், இதுபோன்ற சில விளம்பரங்கள் பயனீட்டாளர்களை ஏமாற்றும் வண்ணம் அமைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை நாடுவோரைக் குறிவைத்து அத்தகைய விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன.
‘கிரீன்வாஷிங்’ (greenwashing) எனப்படும் அச்செயல் இந்திய அரசாங்கத்துக்குத் தெரிய வந்துள்ளது.
அதைத் தடுக்கவும் தவிர்க்கவும் அந்நாட்டின் மத்தியப் பயனீட்டாளர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority - CCPA) புதிய வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளது. அவற்றின்கீழ் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களையும் சேவைகளையும் வழங்குவதை ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும்.
விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்று போலியாக விளம்பரப்படுத்தி நிறுவனங்கள் பொருள்களையும் சேவைகளையும் விற்பது ‘கிரீன்வாஷிங்’ என்றழைக்கப்படுகிறது. அவ்வாறு செய்வதன்மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தாங்கள் விற்கும் பொருள், சேவைகளில் இருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய அம்சங்களை மறைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பொருள்களையும் சேவைகளையும் விற்கும் முறை இதுவரை அதிக கட்டுப்பாடின்றி சீராக நடந்து வந்துள்ளது. அவ்வாறு பொருள்களும் சேவைகளும் விற்கப்படுவதை நிறுத்த இந்தியாவின் மத்தியப் பயனீட்டாளர் பாதுகாப்பு ஆணையம் இம்மாதம் 16ஆம் தேதியன்று புதிய வழிகாட்டிகளை வெளியிட்டது.
புதிய வழிகாட்டிகளின்கீழ், நம்பகமான மூன்றாம் தரப்பு அமைப்புகள் வழங்கும் அதிகாரபூர்வச் சான்றிதழ்கள் போன்றவற்றைக் கொண்டு தாங்கள் விற்கும் பொருள்கள் அல்லது சேவைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதை நிறுவனங்கள் நிரூபிக்கவேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதை வாடிக்கையாளர்களிடமும் தெரியப்படுத்தவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
விளம்பரத்திலேயே தெரியப்படுத்தலாம். கியூஆர் குறியீடு, இணைய முகவரி ஆகியவற்றின் வாயிலாகவும் தெரியப்படுத்தலாம்.

