புதுடெல்லி: பகுதி மின்கடத்திச் சில்லு தயாரிப்பில் இந்தியா ரூ.1,000 கோடி முதலீடு செய்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
‘இந்தியா பகுதி மின்கடத்தித் திட்டம் 2.0’ (ஐஎஸ்எம் 2.0) என்ற புதிய திட்டத்தை அவர் அறிவித்தார்.
இந்த இரண்டாம் கட்டத் திட்டமானது புதிய தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும் என்றும் வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் வைஷ்ணவ் குறிப்பிட்டார்.
‘2 நேனோமீட்டர்’ வகைச் சில்லுகள் தயாரிப்பை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சில்லு வடிவமைப்பு, திறமையான பணியாளர்களை உருவாக்குதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும் என்றார் திரு வைஷ்ணவ்.
புதிய தொழில் நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க இந்திய அரசு விரும்புகிறது. மேலும், உள்நாட்டுச் சில்லு வடிவமைப்பு நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவில் ‘குவால்காம்’ போன்ற பெரிய நிறுவனங்களை உருவாக்குவதும் புதிய திட்டத்தின் மற்ற முக்கிய அம்சங்களாகும்.
இதற்காகவே 2026-27 நிதி ஆண்டில் இத்திட்டத்துக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
மிகச்சிறிய, ‘2 நேனோமீட்டர்’ சில்லுகள் அதிகவேகமாகச் செயல்படக்கூடியவை.
தொடர்புடைய செய்திகள்
“அவற்றை நீண்டகால அடிப்படையில் தயாரிப்பதுதான் ‘ஐஎஸ்எம்’ திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இதன் மூலம் இந்திய தொழில்நுட்ப வளர்ச்சி அடுத்த கட்டத்துக்குச் செல்லும்,” என்று குவால்காம் நிறுவனம் இந்தியாவில் உருவாக்கியுள்ள ‘2 நேனோமீட்டர்’ சில்லு அறிமுக விழாவில் பேசியபோது அமைச்சர் குறிப்பிட்டார்.
“திறன் மேம்பாடு இந்தத் திட்டத்தின் முக்கியத் தூண். எனவே, பகுதி மின்கடத்தித் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் இளையர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது,” என்று அமைச்சர் வைஷ்ணவ் கூறினார்.
இதற்குத் தேவைப்படும் வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்காலத்தில் திறமையான பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சில்லு தயாரிப்புக்குத் தேவையான இதர கருவிகள், வேதிப்பொருள்கள், வாயு விநியோகம் செய்யும் நிறுவனங்களையும் இந்தப் புதிய திட்டத்தின்கீழ் கொண்டுவர இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் பகுதி மின்கடத்தித் துறை தயாரிப்புக்குத் தேவைப்படும் சூழல் 100 விழுக்காடு அளவுக்கு உருவாக்கப்படும் என்று அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
‘ஐஎஸ்எம் 2.0’ திட்டம் இந்தியாவின் தொழில்நுட்பப் பாய்ச்சலை உறுதிசெய்யும் என்று துறைசார் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

