புதுடெல்லி: இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதிகள் குறித்து பாகிஸ்தான் அறிந்துகொள்ள வேண்டும். ஜம்மு - காஷ்மீர் யூனியன் நிலப்பரப்பு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே. அது எப்போதும் இந்திய எல்லைக்குட்பட்டதாகவே இருக்கும் என்று ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தார் ஐக்கிய நாடுகள் சபையில் ஜம்மு - காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியபோது, ஹரிஷ் இதனை தெரிவித்தார்.
“பாகிஸ்தான் முன்வைக்கும் தவறான பிரசாரக் கருத்துகள் உண்மையை ஒருபோதும் மாற்றிவிடப் போவதில்லை.
“ஜம்மு - காஷ்மீர் மக்கள் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் வாக்கு செலுத்தி தங்களுக்கான அரசாங்கத்தை தேர்வு செய்துள்ளனர்.
“ஜம்மு - காஷ்மீர் மக்களின் விருப்பமும் தேர்வும் மிகவும் தெளிவாக உள்ளது. பாகிஸ்தானைப் போல் அல்லாமல், ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயகம் வலுவாக உள்ளது,” என்று திரு ஹரிஷ் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: பாகிஸ்தான்
முன்னதாக, காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு இந்தியாவை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானத்தின்படி, காஷ்மீர் மக்கள் தங்கள் சுதந்திரத்தையும் எதிர்காலத்தை முடிவு செய்யும் உரிமையையும் பாரபட்சமின்றி பெறுவதற்கு இந்தியா அனுமதிக்க வேண்டும். அதற்காக அங்கு ஐநா பாதுகாப்பு மன்றத்தின் கீழ் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் அந்தத் தீர்மானத்தில் கூறியுள்ளது.
காஷ்மீர் விவகாரங்களுக்கான அமைச்சர் அமிர் முக்கம், அந்தத் தீர்மானத்தின் மூலம் காஷ்மீர் மக்களுக்கான பாரபட்சமன்ற உரிமை, அரசியல், அரசதந்திர ரீதியிலான ஆதரவு கிடைப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது என்று கூறியதாக பாகிஸ்தான் வானொலி தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்படுவது இது முதல் முறையல்ல. செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த வானொலி தெரிவித்தது.
இருப்பினும், காஷ்மீரில் உரிமைக்காகப் போராடும் மக்களின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மனித உரிமைகளை மேம்படுத்தி அமைதியான சூழலை உருவாக்குவதற்கும், இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்பதையும் இந்தியாவுக்கு வலியுறுத்த இந்த மசோதா நிறைவேற்றப்படுகிறது என்று அந்த வானொலி தெரிவித்தது.