புதுடெல்லி: இந்தியா-ஜப்பான் இடையே கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இரு நாடுகளுக்கு இடையேயான தற்காப்புத்துறை சார்ந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இரு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மை, கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
முக்கிய அம்சங்கள்
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் தற்காப்புத் துறை சார்ந்த தொழில்நுட்பங்களை இணைந்து மேம்படுத்துவதற்கும் தயாரிப்பதற்கும் இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இரு நாடுகளின் முப்படைகளுக்கு இடையே நடைபெறும் பயிற்சிகளை விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரு நாட்டு கடற்படைக் கப்பல்களும் பரஸ்பரம் துறைமுகங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் பராமரிப்பு, தளவாட ஆதரவைப் பெறவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், இந்தியாவும் ஜப்பானும் ஜனநாயகக் கொள்கைகளாலும் பண்பாட்டுத் தொடர்புகளாலும் பிணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அனைத்துலகக் கடல்சார் வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பு இரு நாடுகளின் பொருளியலுக்கும் பாதுகாப்புக்கும் மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்துப் பேசிய ஜப்பான் அமைச்சர் கொய்சுமி, இந்திய ஆயுதப் படைகளின் செயல்திறனைப் பாராட்டினார்.
ஜப்பானின் குமாமோட்டோ பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது இந்தியா தெரிவித்த அனுதாபங்களுக்கும் உதவிகளுக்கும் அவர் தனது நன்றியைப் பதிவு செய்தார்.
இந்தியா-ஜப்பான் இடையேயான அரசதந்திர உறவுகள் தொடங்கி, 75வது ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது.
இத்தகைய சூழலில் இரு நாடுகளுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவில் மிக முக்கியமான மைல்கல்லாக அமையும் எனத் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


