செயற்கை நுண்ணறிவு, எரிசக்தித் துறை உடன்பாடுகளில் இந்தியா-ஜப்பான் கையெழுத்து

செயற்கை நுண்ணறிவு, எரிசக்தித் துறை உடன்பாடுகளில் இந்தியா-ஜப்பான் கையெழுத்து

2 mins read
8ea33eaf-e6f7-4344-9dad-1f07aa997ebf
புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பேசினர். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான உடன்பாடுகளில் இந்தியாவும் ஜப்பானும் கையெழுத்திட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு, உலோகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகள் அவை.

அது தவிர, பொருளியல் பாதுகாப்புக்கான இணைத் திட்டம் ஒன்றையும் அவை தயாரித்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா சென்றுள்ள ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

“ஜப்பானின் துல்லியத் தொழில்நுட்பம், இந்தியாவின் மென்பொருள் திறன் ஆகியவற்றின் சங்கமம், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்குப் புதிய தெம்பையும் வலிமையையும் அளிக்கும்,” என்றார் அவர்.

திருவாட்டி தக்காய்ச்சி மூன்று நாள் பயணமாக புதுடெல்லி சென்றுள்ளார். இரு ஆசிய நாடுகளும் தங்களுக்கு இடையிலான 16வது வருடாந்தர உச்சநிலைக் கூட்டத்தை நடத்துகின்றன.

அந்த இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2025-26 நிதி ஆண்டில் $27.5 பில்லியனைத் தொட்டது.

கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையில் இந்தியாவில் ஜப்பான் $3.2 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளைச் செய்துள்ளதாக இந்திய அரசாங்கத் தரப்புத் தரவுகள் தெரிவித்துள்ளன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஜப்பானும் இந்தியாவும் ‘குவாட்’ எனப்படும் நான்கு நாடுகள் அமைப்பில் இடம்பெற்றுள்ளதாகத் திரு மோடி கூறினார்.

தற்காப்புத் துறை தொடர்பான இணை மேம்பாட்டுத் திட்டம் ஒன்றில் இரு நாடுகளும் கையெழுத்திட்டதாகவும் இத்தகைய திட்டத்தில் இரு நாடுகளும் இணைவது இது முதன்முறை என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, புதுடெல்லியில் உள்ள ‘ஹைதராபாத் இல்லம்’ கட்டடத்தில் பிரதமர் மோடியும் ஜப்பானியப் பிரதமர் தக்காய்ச்சியும் பேராளர் நிலையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி போன்றவர்களும் அந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் முன்னர் திருவாட்டி தக்காய்ச்சிக்கு இந்திய அதிபர் மாளிகையில் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பானியப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் இந்தியா சென்றிருப்பது இதுவே முதன்முறை.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுஜப்பான்எரிசக்தி