புதுடெல்லி: இந்தியாவில் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தை மீண்டும் நடத்துவதற்கு இருந்த வரி மற்றும் விதிமுறை சார்ந்த தடைகளை நீக்கி, வரும் 2028ஆம் ஆண்டிற்குள் போட்டியை நடத்த இந்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக ஓர் உயர்நிலை பணிக்குழுவை அரசு அமைத்துள்ளது.
தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியில் உள்ள புத்த அனைத்துலகப் பந்தயத் தடத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய கிராண்ட் பிரீ முதன்முதலில் அறிமுகமானது.
எனினும், உள்ளூர் அதிகாரிகளால் இந்த விளையாட்டு ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாக வகைப்படுத்தப்பட்டதால், கடுமையான வரி விதிப்புகள் மற்றும் சுங்கக் கட்டணச் சிக்கல்கள் எழுந்தன. இதன் காரணமாக, 2013ஆம் ஆண்டுடன் இந்த பந்தயம் நிறுத்தப்பட்டது.
தற்போது பல ஆண்டுகளுக்கும் மேலான இந்த இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வர இந்திய விளையாட்டுத் துறை அண்மையில் முக்கியத் தொழில்துறை பங்காளிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.
இதில் இந்திய மோட்டார் விளையாட்டுக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், அனைத்துலகப் பந்தயத் தடத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதானி குழுமத்தின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
“இந்தியாவில் ஃபார்முலா ஒன் உள்ளிட்ட மோட்டார் பந்தயங்களின் மறுமலர்ச்சி, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வரி விவகாரங்கள், ஒழுங்குமுறை அம்சங்கள், உள்கட்டமைப்பு மற்றும் கொள்கை சார்ந்த சவால்களை இந்த சிறப்புக் குழு விரிவாக ஆராயும்,” என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த முயற்சிக்கு இந்தியாவின் முன்னணி கூட்டாண்மை நிறுவனமான அதானி குழுமம் முழு ஆதரவை வழங்கி வருகிறது.
ஃபார்முலா 1 பந்தயத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான பணிகளில் தாம் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளதாக அதானி குழுமத்தின் முக்கிய தலைவர் கரண் அதானி உறுதிப்படுத்தியுள்ளார்.
அதே வேளையில், எஃப்1 அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெஃபானோ டொமினிகாலி, உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் சந்தையான இந்தியாவுக்குத் திரும்புவதில் தங்களுக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்கு முறையான திட்டமிடல் அவசியம் என்பதால் இது குறுகிய காலத்தில் சாத்தியமாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

