புதுடெல்லி: ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் லட்சிய இந்தியாவுக்கானது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அந்த ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளிலும் உள்ள சந்தைகளில் இந்தியத் தயாரிப்புகளுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை (ஜனவரி 29) நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, தற்போது கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி உலகத் தரத்திலான பொருள்களை உற்பத்தி செய்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தையை இந்திய தயாரிப்புகள் ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“உலக நாடுகளின் ஈர்ப்பு மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. தன்னம்பிக்கை கொண்ட நாடாக இருந்த இந்தியா இப்போது நம்பிக்கை ஒளிக்கீற்றாக மாறியுள்ளது.
“புதிய ஒப்பந்தங்களுடன் கிடைத்துள்ள வாய்ப்புகளை இந்திய உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்.
பாதுகாப்பான ஏஐ: மோடி விருப்பம்
வெளிப்படையான, பாரபட்சமற்ற, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியா பாடுபட வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
‘ஏஐ’ நெறிமுறைப் பயன்பாட்டில் எந்தவிதச் சமரசத்துக்கும் இடம் அளிக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் அடுத்த மாதம் 2026ஆம் ஆண்டுக்கான ‘ஏஐ’ உச்சநிலை மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள், நிபுணர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
இதில் பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள், ஐஐடி சென்னை, ஐஐடி மும்பை ஆகியவற்றின் நிபுணர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, முக்கியமான துறைகளில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டில் இந்திய நிபுணர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அனைத்துத் துறைகளிலும் புதிய தொழில்நுட்பம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தேசிய வளர்ச்சிக்குப் பங்களிக்க அத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் திரு மோடி வலியுறுத்தினார்.
‘யுபிஐ’ (UPI) மூலம் இந்தியா தனது தொழில்நுட்பத் திறமையை நிரூபித்துள்ளது என்றும் ‘ஏஐ’ துறையிலும் இதைப் பின்பற்ற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா தனித்துவமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இந்த உலகத்துக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

