தனித்துவமான ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியா விருப்பம்: மோடி

தனித்துவமான ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியா விருப்பம்: மோடி

1 mins read
408d1f4c-6bc9-49c9-939c-d8b4ae0aa759
மோடி. - படம்: தி ஸ்டேட்ஸ்மேன்

புதுடெல்லி: வெளிப்படையான, பாரபட்சமற்ற, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியா பாடுபட வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

‘ஏஐ’ நெறிமுறைப் பயன்பாட்டில் எந்தவிதச் சமரசத்துக்கும் இடம் அளிக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லியில் அடுத்த மாதம் 2026ஆம் ஆண்டுக்கான ‘ஏஐ’ உச்சநிலை மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள், நிபுணர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது.

இதில் பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள், ஐஐடி சென்னை, ஐஐடி மும்பை ஆகியவற்றின் நிபுணர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, முக்கியமான துறைகளில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டில் இந்திய நிபுணர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அனைத்துத் துறைகளிலும் புதிய தொழில்நுட்பம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தேசிய வளர்ச்சிக்குப் பங்களிக்க அத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் திரு மோடி வலியுறுத்தினார்.

‘யுபிஐ’ (UPI) மூலம் இந்தியா தனது தொழில்நுட்பத் திறமையை நிரூபித்துள்ளது என்றும் ‘ஏஐ’ துறையிலும் இதைப் பின்பற்ற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா தனித்துவமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இந்த உலகத்துக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்