ஆசியான் நாடுகள் இந்தியாவுடன் நல்ல வர்த்தக உறவைக் கொண்டிருந்தாலும் இந்தியா கூடுதலாக ஆசியான் சந்தைகளைச் சென்றடையலாம்.
இந்தியாவின் ‘ஆர்ஐஎஸ்’ எனப்படும் வளர்ந்துவரும் நாடுகளுக்கான ஆய்வு, தகவல் கட்டமைப்புக்கான ஆய்வாளர் அதுல் கெளஷிக், ஆசியான் நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் சிலரிடம் இதனைத் தெரிவித்தார்.
ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் சம அளவில் இல்லை என்று கூறிய திரு கெளஷிக், “ஆசியான் பொருள்களால் இந்தியச் சந்தைகளில் எளிதாகப் புக முடிகிறது. ஆனால், இந்திய ஏற்றுமதியாளர்கள், ஆசியச் சந்தைகளைச் சென்றடையச் சிரமப்படுகின்றனர்,” என்றார்.
“செம்பனை எண்ணெய்க்கான தேவை இந்தியாவில் வலுவாக இருப்பதால் இந்தோனீசியா அதனை வழங்கலாம். மருந்துகளையும் தகவல் தொழில்நுட்பச் சேவைகளையும் பிற நாடுகளுக்கு இந்தியாவால் வழங்க முடியும். உற்பத்தித் திறனை நன்கு மேம்படுத்தியுள்ள வியட்னாம், இந்த வர்த்தகத்திற்கு ஆதரவளிக்கலாம்,” என்று திரு கெளஷிக் கூறினார்.
‘பிரிக்ஸ்’ அமைப்பில் இந்தோனீசியா இந்த ஆண்டு சேர்ந்ததன் மூலம் அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவு புதிய நிலையை எட்டியிருப்பதாகத் திரு கெளஷிக் குறிப்பிட்டார்.
2025ஆம் நிதியாண்டில் இந்தியா - இந்தோனீசியா இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 28.16 பில்லியன் டாலரை எட்டியுள்ள நிலையில், இந்தோனீசியா, இந்தியாவின் உயரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் தொடர்பில் அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நேரத்தில், இந்தியா மிகுந்த கவனத்துடன் ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்கவேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
“பதிலடிகள் பதற்றங்களை அதிகரிக்கக்கூடும் என்பதால் பதில் நடவடிக்கைகள் எப்போதுமே தீர ஆராயப்பட்டு எடுக்கவேண்டும். உலகத் தெற்கு எனப்படும் தென்கிழக்காசிய, தெற்காசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகளுடனான வர்த்தக ஒத்துழைப்பு நிலைத்தன்மைக்கு வழிவகுக்கக்கூடியது,” என்றும் திரு அதுல் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆசியான் - இந்தியா பொருள் வணிக உடன்பாடு (ASEAN–India Trade in Goods Agreement) பற்றியும் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் உலகத் தெற்கு உத்திபூர்வ அணுகுமுறையை ஆசியான்-இந்தியக் கூட்டுறவுகள் பொதுவாக ஆதரிப்பதாகக் கூறினார்.
அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஆக அதிக பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் இந்தியா இருப்பதாகக் கூறிய திரு அதுல், ஆடைத் தயாரிப்புத் துறை, அணிகலன், தோல் வணிகம் எனப் பல துறைகளில் இந்தியா ஆட்குறைப்பு செய்து வருவதாகக் கூறினார்.
“இருந்தபோதும், உலகில் மற்ற பல பெரும்பொருளியல்கள் உள்ளன. தற்போதுள்ள சவால்மிக்கச் சூழலை எப்படி நமக்குச் சாதகமாக்க வேண்டும் என்பது குறித்து நாம் ஆய்வு செய்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்தியா காலங்காலமாகப் பின்பற்றிவரும் அணிசேராக் கொள்கையின் அடிப்படையில் ஆய்வு, பேச்சுவார்த்தைக்கான ஆதரவு, உத்திபூர்வ செயல்முறை ஆகியவை தேவைப்படுகின்றன என்ற நோக்கில் ‘ஆர்ஐஎஸ்’ அமைப்பு 1983ல் உருவாக்கப்பட்டது.
1986ல் இடம்பெற்ற ‘உருகுவே ரவுண்ட்’ முதல் தற்போது நடப்பிலுள்ள ஜி20, பிரிக்ஸ் விவகாரங்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாக ஆர்ஐஎஸ் செயல்படுகிறது.