கொள்ளைநோய்ப் பரவலைச் சமாளிப்பது, அவசரகால சுகாதாரச் சேவைகளை வழங்குவது, சான்று அடிப்படையிலான புத்தாக்கங்களை உருவாக்குவது ஆகியவற்றில் ஆசியான் நாடுகளுக்குத் துணைநிற்க இந்தியா முனைகிறது.
1920களில் சத்துணவுக் குறைபாடுகளை ஆராய்வது முதல் சில ஆண்டுகளுக்குமுன் நேர்ந்த கொவிட்-19 கிருமிப்பரவல் தடுப்பை வழிநடத்தியதுவரை இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் (ஐசிஎம்ஆர்) பலவற்றைக் கடந்து வந்து தற்போது தனது திறன்களை ஆசியான் நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள முற்படுகிறது.
புதுடெல்லியில் கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 25) அனைத்துலகச் செய்தியாளர்களுடன் பேசிய அந்த அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் பால் இதனைத் தெரிவித்தார்.
“இந்தியா செய்துவரும் எல்லா மருத்துவ ஆய்வுகளையும் எங்கள் மன்றம் பிரதிபலிக்கிறது. எங்கள் கவனம் இப்போது இந்தியாமீது மட்டுமன்று. ஆசியான் நாடுகள் உட்பட வட்டாரப் பங்காளிகளுக்கு எங்களது புத்தாக்கங்கள் அளிக்கப்போகும் நன்மைகள் குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
செல்வதற்குக் கடினமான இடங்களுக்குத் தடுப்பூசிகள், ரத்தம், மருந்துகள் ஆகியவற்றை வானூர்தி வழியாகச் சேர்ப்பதில் இந்தியா வளர்த்துள்ள நிபுணத்துவத்தை டாக்டர் பால் குறிப்பிட்டார்.
நாகலாந்து, மணிப்பூர், இமயமலைப் பகுதிகள் போன்ற இடங்களில் உள்ளோர் பல்வேறு வகையான மருத்துவ சிகிச்சைகளால் பயனடைய இந்த விநியோகம் வகை செய்வதாகவும் அவர் கூறினார்.
ஆசியான் வட்டாரத்தில் செல்வதற்குக் கடினமான இடங்களுக்கு இந்தியாவின் வழிமுறையைப் பின்பற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மனிதர்கள், விலங்குகள், செடிகள், சுற்றுப்புறச் சுகாதாரம் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்கான இயக்கத்தின்கீழ் தற்போது 20க்கும் மேற்பட்ட ‘பிஎஸ்எல் 3, 4’ (BSL 3, 4) ஆய்வுக்கூடங்கள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
விலங்குகளிலிருந்து சக்திவாய்ந்த கிருமிகள் பரவினால் அவற்றை விரைவில் கண்டறியும் உள்கட்டமைப்பை இந்தியா இப்போது கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“எல்லைப் பகுதிகளைக் கொள்ளைநோய்க் கிருமிகள் கண்டுகொள்வதில்லை. இந்தியாவுக்கான நமது வரைமுறை, ஆசியான் கட்டமைப்புகளுக்கு எளிதாகப் பொருந்தக்கூடியவை,” என்று ஐசிஎம்ஆர் அமைப்பின் டாக்டர் நிவேதிதா குப்தா தெரிவித்தார்.
ஐசிஎம்ஆரின் சுற்றுச்சுழல் கட்டமைப்பின்கீழ் இந்தியா முழுவதிலும் தற்போது 28 கல்வி நிலையங்களும் 165 ஆய்வுக்கூடங்களும் உள்ளன. இதுவரை 23 உலக நாடுகளைக் கொண்டுள்ள ஐசிஎம்ஆர், ஆசியானுடன் கூடுதல் நெருக்கம் பாராட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காசநோயைக் கண்டறியும் கருவிகள், செயற்கை நுண்ணறிவு முன்னெடுக்கும் சோதனை முறைகள், நோய்த்தடுப்புச் சோதனைகள் ஆகியவை தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.
நடைமுறைக்கு ஏற்ற, குறைந்த செலவில் தயாரிக்கப்படும் இந்தியாவின் புத்தாக்கங்கள், தேசியச் சொத்துகள் மட்டுமின்றி வட்டார அளவில் பிற நாடுகளுடனும் பகிரத்தக்க வளங்களாகவும் இருப்பதாக டாக்டர் பால் குறிப்பிட்டார்.