புதுடெல்லி: புதைபடிவமற்ற எரிசக்தி என்னும் எரிசக்தி உருமாற்றம் இந்தியாவில் மெதுவாக நடைபெறுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதனால் பருவநிலை மாற்றம் தொடர்பான இந்தியாவின் குறிக்கோள்களுக்கு சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் இந்தியாவில் உள்ள ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்றத்திற்கான 26வது ஐநா மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 2030ஆம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற எரிசக்தியின் அளவை ஐந்து மடங்கு அதிகரித்து 500 கிகாவாட்டை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறினார்.
அவர் அவ்வாறு கூறி மூன்றாண்டுகள் கடந்திருக்கும் வேளையில், அந்த இலக்கை அடைவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இலக்கை அடையத் தேவையான காற்றாலை, சூரியசக்தி, ஹைட்ரஜன் எரிசக்தி, அணுமின் திட்டங்களில் பாதிக்கும் குறைவானவையே மூன்றாண்டு காலத்தில் தொடங்கப்பட்டு உள்ளன.
அதாவது, 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை 18.48 கிகாவாட் அளவுக்கே புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.
2030ஆம் ஆண்டின் இலக்கை அடைய இது மிகவும் சொற்பமான அளவு.
புதைபடிவமற்ற எரிசக்தி இலக்கை அடைவதற்கான முயற்சிகள் தொய்வடைந்திருப்பதால், பருவநிலை மாற்றத்திற்கான இந்தியாவின் விரிவான குறிக்கோள்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், மாசு ஏற்படுத்தக்கூடிய நிலக்கரி மின்சார உற்பத்திக்கான முதலீடுகள் அதிகரிக்கவும் அது காரணமாக உள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீதான முதலீடுகளே இந்தியாவின் தற்போதைய தேவை.