கோதுமை மாவு ஏற்றுமதித் தடையை நீக்கியது இந்தியா

கோதுமை மாவு ஏற்றுமதித் தடையை நீக்கியது இந்தியா

2 mins read
8427df0e-394c-4a7c-befe-c85f22084aec
கடந்த 2022 ஜூலை 12ஆம் தேதி கோதுமை சார்ந்த பொருள்களின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்திருந்தது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: கோதுமை மாவு, மைதா, ரவை, ஆட்டா உள்ளிட்ட கோதுமை சார்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையைக் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசு நீக்கியுள்ளது.

இந்தத் தடைநீக்கம் உடனடியாக நடப்பிற்கு வந்தது. உள்நாட்டுத் தேவைக்கான கையிருப்பு போதுமான அளவில் இருப்பதால், அரசாங்கம் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதன்மூலம் கோதுமை சார்ந்த அனைத்துப் பொருள்களின் ஏற்றுமதியும் தடையின்றி இயல்புநிலைக்குத் திரும்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷ்யா-உக்ரேன் மோதல் காரணமாக அனைத்துலகச் சந்தையில் கோதுமை விலை கிட்டத்தட்ட 40 விழுக்காடுவரை கூடியது.

அத்துடன், கருங்கடல் பகுதியில் நிலவிய போரால் விநியோகத் தொடரும் பாதிக்கப்பட்டது. அவ்வழியாகத்தான் உலகில் நான்கில் ஒரு பங்கு கோதுமை வணிகம் நடந்துவந்தது.

உலகளாவிய இந்த விநியோகத் தொடர் பாதிப்பை ஈடுசெய்யும் நோக்கில் இந்தியா ஏற்றுமதியை அதிகரித்தது. அதனால், இந்திய உள்நாட்டுச் சந்தையில் கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை வெகுவாக உயர்ந்தது.

அதனைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடந்த 2022 ஜூலை 12ஆம் தேதி கோதுமை சார்ந்த பொருள்களின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடைவிதித்தது.

பின்னர், இவ்வாண்டுத் தொடக்கத்தில் அந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, ஆண்டிற்கு ஐந்து மில்லியன் டன் வரை மட்டும் கோதுமை சார்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் அண்மைக்கால அறுவடைமூலம் கோதுமை உற்பத்தி 120.6 மில்லியன் டன் எனச் சாதனை அளவிற்கு உயர்ந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோதுமை உற்பத்தியாளராக இந்தியா விளங்கி வருகிறது.

இந்நிலையில், கோதுமை பொருள்கள் மீதான தடையை இந்தியா நீக்கியிருப்பது, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு வட்டாரங்களைச் சேர்ந்த நாடுகளில் கோதுமை விநியோக நெருக்கடியைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இந்திய விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கும். வரும் காலங்களில் ஏற்றுமதி அளவு மேலும் அதிகரிக்கும் என்று வணிக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
கோதுமைஏற்றுமதிதடைஇந்தியா