புதுடெல்லி: கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 165 புலிகள் மாண்டுபோயின.
அவற்றுள் 60 விழுக்காட்டுப் புலிகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே மரணமடைந்தது கவலையளிப்பதாக அமைந்தது.
ஆக அதிகமாக, 785 புலிகளின் இல்லமாகத் திகழும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 58 புலிகள் மாண்டன. அதற்கடுத்தபடியாக, மகாராஷ்டிரா (38), கர்நாடகா (15), கேரளா (13), அசாம் (12) ஆகிய மாநிலங்களிலும் புலிகளின் இறப்பு ஈரிலக்க எண்ணிக்கையில் பதிவானது.
தேசிய புலிப் பாதுகாப்பு ஆணையம் தொகுத்த தரவுகளின்மூலம் இவை தெரியவந்துள்ளன. கிட்டத்தட்ட 70 விழுக்காட்டுப் புலிகளின் இறப்பிற்கு இயற்கை சார்ந்த காரணங்களே கூறப்படுகின்றன. 2022ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 3,682 புலிகள் உள்ளன. கர்நாடகாவில் 563, உத்தராகண்ட்டில் 560, மகாராஷ்டிராவில் 444 புலிகள் உள்ளன.
வாழிடப் பகுதிகள் சுருங்கி வருவதாலும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் பெரும்பாலான புலிகள் காப்பகங்கள் முழுமையான அளவை எட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஆக மோசமாக, கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 182 புலிகள் மாண்டன. அதற்கடுத்த ஆண்டில் 126 புலிகள் இறந்துவிட்டன.

