மனைவியைத் தன் நண்பர்கள் சீரழித்ததை வெளிநாட்டிலிருந்து பார்த்து ரசித்த கணவர்

2 mins read
fde5e1df-db44-4945-8d3e-6b21088f3e08
கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்த பாலியல் கொடுமையைத் தன் குழந்தைகளுக்காகப் பொறுத்துக்கொண்டதாக அப்பெண் கூறியுள்ளார். - மாதிரிப்படம்

மீரட்: வெளிநாட்டிலுள்ள தன் கணவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அவருடைய நண்பர்கள் தன்னைச் சீரழிக்க அனுமதித்ததாகக் கூறி 35 வயது இந்தியப் பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அப்பெண் உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாகரைச் சேர்ந்தவர்.

பணத்திற்காகத் தான் சீரழிக்கப்பட்டதாகவும் அக்காணொளிகளைச் சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் தன் கணவர் பார்த்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

இப்போது ஒரு மாதக் கர்ப்பிணியாக இருக்கும் அப்பெண்ணுக்குக் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணமானது. அவர்களுக்கு ஏற்கெனவே இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.

சவூதியில் வாகனப் பழுதுபார்ப்பாளராக வேலைசெய்து வரும் அப்பெண்ணின் கணவர் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை இந்தியா செல்வது வழக்கம்.

மூன்று ஆண்டுகளுக்குமுன் தன் இரு நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்த தன் கணவர், தன்னை அவர்களுக்கு விருந்தாக்கியதாகக் காவல்துறையிடம் அளித்த புகாரில் அப்பெண் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இருக்கும் பகுதியிலேயே அவ்விருவரும் வசித்து வருகின்றனர். அவ்விருவரும் அவ்வப்போது வந்து என்னைச் சீரழித்து, அதனைக் காணொளியாகப் பதிவுசெய்து என் கணவருக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து என் கணவரிடம் நான் சண்டை போட்டேன். ஆனால், அவர்கள் பணம் தருவதால் அமைதியாக இருக்கும்படி என்னிடம் கூறிவிட்டார்,” என்று அப்பெண் விவரித்துள்ளார்.

மேலும், தன் குழந்தைகளுக்காக அமைதி காத்ததாகவும் தன்னை மணமுறிவு செய்துவிடுவதாகத் தன் கணவர் மிரட்டியதாகவும் அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அப்பெண்ணின் புகார் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இக்கொடுமை குறித்து இரு வாரங்களுக்கு முன்னர்தான் தங்களுக்குத் தெரியவந்ததாக அப்பெண்ணின் சகோதரர் கூறியுள்ளார்.

தன் சகோதரியின் கணவரும் அவருடைய நண்பர்களும் வெளிநாட்டிற்குத் தப்பியோட முயன்று வருகின்றனர் என்றும் இவ்விவகாரத்தில் தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்