நொய்டா: இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக வேண்டும் என்று வலியுறுத்திய அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளியல் மேலும் வலுவடையும்போது மக்கள்மீதான வரிச்சுமை குறையும் என்று தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக, முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட AK-203 தாக்குதல் துப்பாக்கிகள் விரைவில் ராணுவத்திற்கு வழங்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் ஐந்து நாள்கள் நடைபெறும் அனைத்துலக வர்த்தக கண்காட்சி 2025ஐ வியாழக்கிழமை (செப்டம்பர் 25) தொடங்கிவைத்து அவர் உரையாற்றினார்.
இந்தியா தன்னிறைவு பெற வேண்டும், ஆய்வு, கண்டுபிடிப்புகளில் முதலீட்டை அதிகரிக்க `வேண்டும். நுண்சில்லுகள் முதல் கப்பல்வரை அனைத்து பொருள்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பது இந்தியாவின் இலக்கு. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற கொள்கையை நாடு தீவிரப்படுத்த வேண்டும்,” என்றார் அவர்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கைப்பேசிகளில் 55 விழுக்காடு உத்தரப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுகிறது. பகுதி மின்கடத்தி துறையிலும் இந்தியா வலிமையடைந்து வருகிறது.
ரஷ்யாவுடன் இணைந்து உத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கித் தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. பாதுகாப்புத் துறையில் இந்தியா விரிந்து பரந்த வளர்ச்சியை ஏற்படுத்தவிருக்கிறது, எங்கும் பயன்படுத்தும் பாதுகாப்புத் தளவாடங்களில் இந்தியத் தயாரிப்பு என்ற முத்திரை இடம்பெறும் வகையில் இந்தியாவின் முன்னேற்றம் இருக்கும் என்று மோடி கூறினார்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், இந்தியாவின் வளர்ச்சி மீள்தன்மையுடனும் மேலும் வளர்ச்சி இரட்டிப்பாகியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்துலகத் தலையீடுகள், நாட்டின் வளர்ச்சியைக் குறிக்கீடு செய்யாது, இது நாட்டின் வளர்ச்சிப் பாதைக்குப் புதிய இலக்கை நிர்ணயிக்கவே வழிவகுக்கும். வரும் ஆண்டுகளில், இந்தியா, பல புதிய துறைகளில் கால்பதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்குப் புதிய சிறகுகளை வழங்குவதாகவும், மக்களுக்கு அதிக சேமிப்புக்கு வழிவகுக்கும் என்றும் மோடி கூறினார்.
“இந்திய மக்களின் வருமானத்தையும் சேமிப்பையும் உயர்த்தியுள்ளோம். பொருளியலைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம். வரிகளைத் தொடர்ந்து குறைப்போம். ஜிஎஸ்டி மறுசீரமைப்பு தொடரும்,” என்றார் மோடி
இந்தக் கண்காட்சியில் ரஷ்யா நெருங்கிய உறவு நாடாகப் பங்கேற்கிறது. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) இந்தியா-ரஷ்யா வர்த்தக உரையாடல் நடைபெற இருக்கிறது. இது பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், உத்தரபிரதேசத்தில் தொழில்நுட்பம் கூட்டு வணிகங்கள், கூட்டு முயற்சிகளுடன் புதிய வணிக வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
கிரேட்டர் நொய்டாவில் செப்டம்பர் 29ஆம் தேதிவரை நடைபெறும் கண்காட்சியில் 2,400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதனை 1.25 லட்சம் வர்த்தகர்களும், 4.50 லட்சம் பொதுமக்களும் பார்வையிட உள்ளனர்.

