புதுடெல்லி: இந்தியா இன்னும் ஐந்தாண்டுகளில், அதாவது 2030ஆம் ஆண்டுக்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ‘புல்லட்’ ரயில்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
அதே ஆண்டில் ஜப்பான் தயாரிக்கும் E10 ரக புல்லட் ரயில்களுக்கு இணையான வேகத்தை இந்தியாவின் ரயில் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
மும்பையில் தொடங்கி அகமதாபாத் வரையிலான 508 கி.மீ வழித்தடத்திற்காக அந்த ரயிலைத் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த புல்லட் ரயில் திட்டத்திற்கான செலவு 2015ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்டதைக் காட்டிலும் இருமடங்காக அதிகரித்துள்ளது.
அதன்படி, ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தொடக்கத்தில் ரூ. .1 லட்சம் கோடியாக இருந்த இத்திட்டத்தின் செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் செலவு மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது அதற்கு முக்கியக் காரணம்.
மேலும், உள்கட்டமைப்புச் செலவுகள் கிட்டத்தட்ட 50 விழுக்காடு அதிகரித்து ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாகியுள்ளது என ரயில்வே அமைச்சு விளக்கமளித்துள்ளது.
அந்தத் திட்டத்திற்கு முன்னதாக, சூரத் - வாபி இடையிலான 97 கி.மீ வழித்தடத்தில் முதல் ‘புல்லட்’ ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது.
‘B28’ ரயில் தொகுப்பு என்று அழைக்கப்படும் அந்த ரயில் சேவையை 2027 ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
