புதுடெல்லி: இந்தியாவில் கொவிட் - 19 பெருந்தொற்றால் 4,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளத்தில் அதிகபட்சமாக 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரியிலிருந்து இதுவரை 37 போ் அக்கொள்ளை நோய்க்குப் பலியாகினர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஐவர் மாண்டனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துவரும் நிலையில், முதியோா், கா்ப்பிணிகள், இணைநோய் பாதிப்புள்ளோர் பொது இடங்களில் முகக் கவசம் அணியுமாறு பல்வேறு மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
மே 22ஆம் தேதி 257 ஆக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 4,026 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா அளவில், கேரளாவில் தான் அதிகமானோர் கொவிட் -19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத், புதுடெல்லி ஆகியவை உள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்த ஐவரில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இருவரும் தமிழகம், கேரளம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.
தொற்றின் தீவிரம் குறைவாகவே உள்ளதாகவும் பெரும்பாலான நோயாளிகள் வீட்டு சிகிச்சையிலேயே குணமடைவதால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
“இந்தியாவில் ஓமிக்ரானின் துணை வகைகளான எல்.எஃப்.7, எக்ஸ்.எஃப்.ஜி., ஜே.என்.1 என்.பி. 1.8.1 ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. நிலைமையை தொடா்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பொதுமக்களிடம் விழிப்புணா்வு அவசியம்; அதேநேரம், அச்சம் தேவையில்லை,’ என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் (ஐசிஎம்ஆா்) தலைமை இயக்குநா் மருத்துவா் ராஜீவ் பெஹல் கூறினார்.