புதுடெல்லி: இந்தியாவில் இவ்வாண்டு போதையில் வாகனம் ஓட்டியதைவிட தேங்காய் விழுந்ததால் 2.2 மடங்கு அதிக விபத்துகள் நேர்ந்தது தனியார் காப்புறுதி நிறுவனமான ‘அக்கோ’ (ACKO) வெளியிட்டுள்ள 2024 விபத்துக் குறியீட்டெண் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாண்டு பதிவான சாலை விபத்துகளில் 78% பெருநகரங்களிலேயே நேர்ந்தன. ஹைதராபாத், டெல்லி , புனே, பெங்களூரு ஆகிய நகர்களில்தான் ஆக அதிக விபத்துகள் நேர்ந்தன.
சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளும் விபத்து நேர முக்கியக் காரணமாக விளங்குகின்றன. அவ்வகையில் பதிவான விபத்துகளில் தெருநாய்களே முதலிடம் பிடித்துள்ளன. அவற்றுள், தெருநாய்களால் 62% விபத்துகளும், பசுக்களால் 29% விபத்துகளும், எருமைகளால் 4% விபத்துகளும் ஏற்பட்டதாக ‘அக்கோ’ அறிக்கை தெரிவிக்கிறது.
குண்டும் குழியுமான சாலைகளால் விபத்துகள் அதிகரித்திருப்பது, நகர்ப் பகுதிகளில் மோசமாக இருக்கும் உள்கட்டமைப்பைக் கோடிகாட்டுவதாக உள்ளது. குண்டும் குழியுமான சாலைகளால் நேர்ந்த விபத்துகளில் 44.8% பெங்களூரில் பதிவாகியுள்ளன. டெல்லியும் (13.3%) மும்பையும் (12.3%) அடுத்த இடங்களில் உள்ளன.
இயற்கைப் பேரிடர்களால் வாகனங்கள் சேதமடைவதும் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியுள்ளது. சென்னை மாநகர்வாசிகள் விண்ணப்பித்த அத்தகைய காப்புறுதிக் கோரிக்கைகளில் 22% மிச்சாங் புயல் தொடர்பானவை.
விபத்துகளில் அதிகமாக சிக்கும் கார்கள்
ஹியுண்டாய் i10 வகை கார்தான் அதிகச் சாலை விபத்துகளில் சிக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து மாருசு சுசுக்கி ஸ்விப்ட், மாருசு சுசுக்கி பலினோ, ஹியுண்டாய் i20, மாருசு சுசுக்கி டிசையர் ஆகிய கார்கள் அடுத்தடுத்த இடங்களில் வந்துள்ளன.