இந்தியா: உறுப்புக் கொடையில் ஆண்களைவிட பெண்களே அதிகம்

இந்தியா: உறுப்புக் கொடையில் ஆண்களைவிட பெண்களே அதிகம்

2 mins read
1bea47c8-1adf-4908-8f5e-ed787a72e725
2025ஆம் ஆண்டு இந்தியாவில் உறுப்புக் கொடை பெற்றுக்கொண்டோரில் 78 விழுக்காட்டினர் ஆண்கள். - படம்: ஃபேஸ்புக்/காவேரி மருத்துவமனை
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் உயிருள்ளபோதே உறுப்புக் கொடை வழங்குபவர்களிடையே தெளிவான பாலின ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.

2025ஆம் ஆண்டு உறுப்புக் கொடை வழங்கியோரில் 68 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் உறுப்புகளைப் பெற்றுக்கொண்டவர்களில் 78 விழுக்காட்டினர் ஆண்கள் என்றும் மத்திய சுகாதார அமைச்சின் அண்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வமைச்சின்கீழ் இயங்கும் தேசிய உறுப்பு, திசு மாற்று அமைப்பின் (நொட்டோ) ஆண்டறிக்கையின்படி, 2025ல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களில் வெறும் 22 விழுக்காட்டினரே பெண்கள் ஆவர்.

இந்தியாவில் சிறுநீரக மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளே ஆக அதிகமாக நடைபெறுகின்றன. பெண்கள் பலரும் தங்கள் குடும்பத்திலுள்ள ஆண் உறவினர்களுக்கு அந்த உறுப்புகளைக் கொடையாக வழங்குகின்றனர்.

2025ஆம் ஆண்டில் உறுப்புக் கொடை வழங்கிய 11,316 பெண்களில் 71 விழுக்காட்டினர் சிறுநீரகத்தையும் 60 விழுக்காட்டினர் கல்லீரலையும் கொடையளித்துள்ளனர். அதே வேளையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களில் 77 விழுக்காட்டினரும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களில் 79 விழுக்காட்டினரும் ஆண்கள் ஆவர்.

இந்தியாவில் நடைபெற்ற மொத்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 62.03 விழுக்காடாகவும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 20.46 விழுக்காடாகவும் இருந்தன. 2025ல் நாட்டில் மொத்தம் 20,138 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இது ஓராண்டில் பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.

உடலுறுப்புக் கொடை தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும் இறந்தவர்களின் உறுப்புகளைக் கொடையாகப் பெறுவதை ஊக்குவிக்கவும் தேசிய அளவில் மின்னிலக்க உறுதிமொழி இணையவாயில் தொடங்கப்பட்டது. கடந்த 2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்தத் தளத்தின் வழியாக இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்புக் கொடை உறுதிமொழி எடுத்துள்ளனர்.

இறந்தபின் உறுப்புக் கொடை வழங்கியோரின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. 2013ல் 837 பேராக இருந்த அவர்களின் எண்ணிக்கை, 2025ல் 3,526ஆக உயர்ந்தது.

உயிரிழந்த ஒருவரின் உறுப்புகள்மூலம் எட்டுப் பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்