புதுடெல்லி: குறுகிய காலம் தொடரும் போர்கள், நீண்டகாலம் தொடரும் போர்கள் ஆகிய இருவகை போர்களுக்கும் இந்தியா தயாராய் இருக்கவேண்டும் என்று அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
புதிய தொழில்நுட்ப அம்சங்கள், போரிடும் முறைகளை மாற்றியுள்ளன; அதனால் சண்டை எத்தனை காலம் நீடிக்கும் என்பதை கணிப்பது சிரமமானது என்று அவர் குறிப்பிட்டார். துல்லியமாகச் செயல்படக்கூடிய ஆயுதங்கள், உடனுக்குடன் தகவல் கிடைப்பது போன்ற அம்சங்கள் போரில் வெற்றியடைவதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் விளக்கினார்.
போர்கள் சில மாதங்களிலிருந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்பதைச் சுட்டிய திரு சிங், வருங்காலத்தில் எப்படிப் போரிடுவது என்பதை இந்தியா ஆலோசிக்கவேண்டும் என்று சொன்னார்.
“இன்றைய காலகட்டத்தில் ஒரு போர் எப்போது முடியும் என்பதை கணிப்பது மிகவும் சிரமமானது. எந்தச் சூழலுக்கும் நாம் தயாராய் இருக்கவேண்டும். திடீரெனத் தலைதூக்கும் சூழலைக் கையாளும் நமது ஆற்றல் போதுமானதாக இருக்கவேண்டும், அதற்குத் தயாராய் இருக்கவேண்டும். இரண்டு மாதங்கள், நான்கு மாதங்கள், ஈராண்டுகள் அல்லது ஐந்தாண்டுகள்கூட ஒரு போர் நீடிக்கலாம். அதற்கு நாம் முழுத் தயார்நிலையில் இருக்கவேண்டும்,” என்று திரு சிங், ரான் சாம்வாட் ராணுவத் தளத்தில் விவரித்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் மோவ் நகரில் அமைந்துள்ள அந்த ராணுவத் தளம், போரிடுவதில் தொழில்நுட்பத்தின் தாக்கத்தைச் சித்திரிக்கும் தளமாக விளங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பணியில் உள்ள ராணுவ வீரர்ப் படைகள், பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் ஆகியவை இனி போதாது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
“இணையம்வழி போரிடுவது, செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வானூர்திகள் ஆகியவை வருங்காலப் போர்களின் அடித்தளமாக அமைகின்றன. துல்லியமாகச் செயல்படும் ஆயுதங்கள், துணைக்கோள்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள், தரவுத் தகவல்களைக் கொண்டு உருவாகும் விவரங்கள் (உத்திகளை வரைவதற்கானவை) ஆகியவைதான் இப்போது போரில் வெற்றியடைவதை தீர்மானிக்கின்றன,” என்று திரு சிங் குறிப்பிட்டார்.

