புதுடெல்லி: லடாக் எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள 28 பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் பெயர்களைச் சூட்டி, அதிகாரபூர்வ வரைபடத்தில் அடையாளம் காட்டிய இந்தியாவின் நடவடிக்கைக்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது.
லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு மோதல் நிகழ்ந்த கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் உள்ளிட்ட 28 இடங்களை அக்டோபர் 2ஆம் தேதி இந்தியா தனது அதிகாரபூர்வ வரைபடத்தில் குறிப்பிட்டது.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் லடாக் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, அலிஷா கிரி, ஜோராவர் சிகரம், கனிஷ்கா சிகரம் உள்ளிட்ட இடங்கள் வரைபடத்தில் சேர்க்கப்பட்டன.
“இந்தியாவால் தன்னிச்சையாக உருவாக்கப்பட்டுள்ள லடாக் யூனியன் பிரதேசத்தை சீனா அங்கீகரிக்காது. சீனாவின் மேற்குப் பகுதிக்கு உட்பட்ட நிலப்பரப்புகளுக்கு இந்தியா பெயரிடுவது சட்டவிரோதமானது,” என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் கூறினார்.
சீனாவின் இக்கூற்றை மறுத்த இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், “லடாக் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதி. சீனாவின் மறுப்புகளால் இந்த உண்மை மாறிவிடாது,” என்று வலியுறுத்தினார்.
புதுடெல்லியில் புதன்கிழமை (அக்டோபர் 14) நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2020ஆம் ஆண்டு எல்லை மோதலுக்குப் பின் நான்கு ஆண்டுகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகே அமைதி திரும்பியதைச் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவுடன் சீனா இயல்பான உறவை விரும்பினால், எல்லைப் பகுதியில் நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
