இந்தியா வீரர்களின் நாடு என்பதை நினைவிற்கொள்ளுங்கள்: பாகிஸ்தானுக்கு மோடி எச்சரிக்கை

2 mins read
8d64feef-8f8c-445c-8a33-c63d2605ca18
காந்திநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றார். - படம்: பிஐபி

புதுடெல்லி: இந்தியாவுடன் தற்போது பாகிஸ்தான் நடத்துவது மறைமுகப் போர் அல்ல என்றும் அது நேரடிப் போர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

நேரடிப் போரில் இந்தியாவை வெல்ல முடியாது என்பது நன்கு அறிந்திருப்பதால்தான், தீவிரவாதத்தை யுத்த நடவடிக்கையாகப் பாகிஸ்தான் பயன்படுத்துகிறது என்று குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றார் அவர்.

“கடந்த 1947ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையின்போது நடந்த முதல் தீவிரவாதத் தாக்குதலின்போதே முஜாஹிதீன்களை அழித்திருந்தால் இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது. சர்தார் படேலின் விருப்பத்திற்கு மாறாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படவில்லை,” என்றார் பிரதமர் மோடி.

கடந்த 75 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக் கொண்டிருப்பதாகவும் மூன்று முறை நேரடிப் போரில் பாகிஸ்தானை தோற்கடித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இனி தோட்டாவுக்குத் தோட்டாவா, அல்லது வேறு நடவடிக்கையா என்று இந்தியாதான் முடிவு செய்யும் என்றும் தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்றும் மோடி சூளுரைத்தார்.

இந்தியா, அண்டை நாடுகளுடன் அமைதியாக வாழ விரும்புவதாகவும் தொடர்ந்து சீண்டினால், இந்தியா வீரர்களின் நாடு என்பதை நினைவிற்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.

“மே 6ஆம் தேதிக்குப் பிறகு, இதை மறைமுகப் போர் என்று சொல்ல முடியாது. ஒன்பது தீவிரவாத முகாம்களை 22 நிமிடங்களில் அழித்தோம். இப்போது அனைத்தும் வெளிப்படையாக நடக்கிறது.

“பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அரசு மரியாதை செய்தது. இது நேரடிப் போர் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்,” என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்