புதுடெல்லி: இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட அணு உலை ஒன்றில் கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு வினை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, உள்நாட்டிலேயே அணுசக்திக்கான எரிபொருளை உற்பத்தி செய்ய அந்நாடு திட்டமிட்டுள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் எரிசக்தித் தேவை அதிகம் உடைய நாடாகவும் சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தில் மூன்றாவது பெரிய நாடாகவும் இந்தியா விளங்குகிறது.
தனது அணுமின் உற்பத்தித் திறனை தற்போதுள்ள 8 கிகாவாட்டிலிருந்து 2047ஆம் ஆண்டிற்குள் 100 கிகாவாட்டாக உயர்த்த அந்நாடு இலக்கு கொண்டுள்ளது.
கல்பாக்கத்தில் உள்ள முதலுறு வேக ஈனுலைத் தற்போது தானாகவே நிலைத்திருக்கக்கூடிய அணுக்கருத் தொடர்வினை தொடங்கும் நிலையை எட்டியுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (ஏப்ரல் 6) தெரிவித்தார்.
தனது அணுசக்தி பயணத்தில் ஒரு தீர்க்கமான அடியை இந்தியா எடுத்து வைத்துள்ளதாகவும் அணுசக்தித் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை நோக்கி நாடு முன்னேறுகிறது என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “செயல்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளும் எரிபொருளைவிட அதிக எரிபொருளை இந்த மேம்பட்ட அணு உலை உற்பத்திசெய்யும் திறன் கொண்டது. நமது அறிவியல் ஆற்றலின் ஆழத்தையும் பொறியியல் திறமையையும் இது வெளிப்படுத்துகிறது,” என்றார் அவர்.

