இந்தியா தனது சொந்த உற்பத்தி திறன்களை மேம்படுத்த வேண்டும்: ராகுல்காந்தி

1 mins read
24cb36d6-57d3-46af-b01c-b657a27852e4
வேலை வாய்ப்பின்மை, கல்வி, தொழில்நுட்பம் ஆகிய பல்வேறு அம்சங்கள் குறித்து டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். - படம்: ANI

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு தன்னை புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது, இந்தியா தனது சொந்த உற்பத்தி திறன்களை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

வேலை வாய்ப்பின்மை, கல்வி, தொழில்நுட்பம் ஆகிய பல்வேறு அம்சங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

தற்போது இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் வேலைவாய்ப்பு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் பல்வேறு உலக நாடுகள் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையால் தவிக்கும் நிலையில் சீனா, வியட்நாமில் இதுபோன்ற போராட்ட நிலை இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய உற்பத்தியில் ஏற்பட்ட வரலாற்றுப்பூர்வமான மாற்றமே இதற்குக் காரணம் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து மேற்கத்திய நாடுகள் பின்வாங்கியதால் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அவை சென்றதாகவும் தற்போது சீனா பலனடைந்ததாகவும் அவர் விளக்கினார்.

உற்பத்திக்கான அணுகுமுறையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதை ஜனநாயகக் கொள்கைகளுடன் இணைக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி கூறினார்.

கல்வி, தொழில் பயிற்சிக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டுமென வலியுறுத்திய ராகுல், கல்வித்துறையில் பல்வேறு திறனுள்ளவர்களுக்கு உரிய வாய்ப்புகள், மரியாதை கிடைக்கவில்லை என அவர் குறைகூறினார்.

செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை சிந்தனைப்பூர்வமாக நிர்வகிக்க வேண்டும் என்றார்.

குறிப்புச் சொற்கள்