தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா, நேப்பாளம்: கனமழையில் 100 பேர் உயிரிழப்பு

1 mins read
3af3e535-0ba0-4a15-b094-5469f0406542
சென்னையில் பெய்த மழையின்போது சேலையால் தமது தலையை மூடிக்கொண்டு செல்லும் பெண். - படம்: இபிஏ

புதுடெல்லி: இந்தியாவிலும் நேப்பாளத்திலும் சில பகுதிகளில் புதன்கிழமையிலிருந்து (ஏப்ரல் 9) கனமழை வெளுத்து வாங்கியதில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்காசியாவில் பருவமழை அல்லாது கூடுதல் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.

இந்தியாவின் மேற்கில் வெப்ப அலை வீசும் எனவும் கிழக்கு, மத்தியப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் புதன்கிழமை எச்சரித்திருந்தது.

கிழக்கு மாநிலமான பீகாரில் மழை தொடர்பான சம்பவங்களில் புதன்கிழமையிலிருந்து குறைந்தது 64 பேர் உயிரிழந்ததாக அந்த மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இந்தியாவில் ஆக அதிக மக்கள்தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, அண்டை நாடான நேப்பாளத்தில் மின்னல் தாக்கியதிலும் கனமழை பெய்ததிலும் குறைந்தது எட்டுப் பேர் உயிரிழந்ததாக தேசிய பேரிடர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் சனிக்கிழமை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும், மின்னல் தாக்கும், பலத்த காற்று வீசும் என வானிலை நிலையம் எதிர்பார்க்கிறது.

தென்னிந்தியாவில் பொதுவாக ஜூன் மாதத்தில் பருவமழை தொடங்கும். ஆனால், அண்மையில் அங்கு வீசிய வெப்ப அலையால் பலர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் ஏப்ரல் மாதம் வழக்கத்தைவிட வெப்பமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிலையம் கடந்த வாரம் கூறியிருந்தது.

குறிப்புச் சொற்கள்