புவனேஷ்வர்: இந்தியாவிலும் நேப்பாளத்திலும் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அதில் சிக்கி குறைந்தது 19 பேர் மாண்டனர்.
ஆறுகளில் நீர்மட்டம் அபாய நிலைக்குமேல் உயர்ந்ததில் 10 ஊழியர்களைக் காணவில்லை.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 15 பேர் மாண்டதுடன் ஐவர் காயமடைந்தனர். ஏறக்குறைய 117 வீடுகள் சேதமடைந்ததாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடுமையான மழையும் புயலும் 63 வட்டாரங்களைப் பாதித்தன. செப்டம்பர் 26ஆம் தேதி நிலவரப்படி வழக்கமான மழையைவிட இதுவரை இல்லாத அளவில் 19 முறை அதிகமான மழை 24 மணி நேரத்தில் பெய்தது.
நேப்பாளத்தில் மூன்று பிள்ளைகள் உள்பட பெண் ஒருவர் நிலச்சரிவில் சிக்கி மாண்டார். நிஷி கோலா கிராமத்தில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது.
வடக்கு மனாங் வட்டாரத்தில் மலை அடிவார முகாமில் இருந்த பத்து நேப்பாள ஊழியர்கள் நிலச்சரிவில் புதையுண்டு மாண்டனர்.
நேப்பாளத்தில் 77 மாவட்டங்களில் 49ல் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக நேப்பாள அதிகாரிகள் எச்சரித்தனர்.
கடந்த 72 மணி நேரத்தில் அங்கு 14 பேர் மாண்டனர்.
காத்மாண்டு பள்ளத்தாக்கு, நேப்பாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது.
மத்திய நேப்பாளத்தில் உள்ள நாராயணி நதி 9 மீட்டர் என்ற அபாய அளவைத் தாண்டி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கான முக்கிய மையமாகத் திகழும் சித்வான் நகர் நெடுஞ்சாலைகளின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கு, வெள்ள அபாயத்தைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, ஆயிரக்கணக்கானோரைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
