மும்பை: சீன நிறுவனங்களின் முதலீடுகள் மீதான தடையை இந்தியா விரைவில் நீக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என இந்தியாவின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு சார்புநிலையையும் பலன்களையும் இரு நாடுகளும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்று செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவும் சீனாவும் அவரவர் நிலையில் உறுதியாக இருப்பதால், சீன முதலீடுகளை விரைவில் இந்தியா தடை செய்யும் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லை என்றார் திரு நாகேஸ்வரன்.
சீனா மேற்கொள்ளும் முதலீடுகள் தொடர்பான இந்தியாவின் கொள்கைகளில் மாற்றம் வருமா என்று கேட்கப்பட்டதற்கு அவர் அவ்வாறு கூறினார்.
இந்தியா, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சீன நிறுவனங்கள் செய்யும் முதலீடுகளைப் பரிசீலிப்பதில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கிறது.
2020 ஜூன் மாதம் இந்திய-சீன எல்லையில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்குப் பிறகு அந்த மாற்றத்தை இந்தியா கடைப்பிடிக்கத் தொடங்கியது.
அந்த மோதலில் இந்தியத் தரப்பில் 20 வீரர்களும் சீனத் தரப்பில் நால்வரும் உயிரிழந்தனர்.

