தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா இப்போது உலகின் தொழிற்சாலையாக உருவெடுத்து வருகிறது: பிரதமர் மோடி

2 mins read
74d106aa-2a9b-4e01-a7e7-06cbc996a013
பிரதமர் நரேந்திர மோடி. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்திய தயாரிப்புகள் உலகம் முழுவதும் சென்று அதன் இருப்பை உணரச் செய்வதால், தனது ‘உள்ளூர் பொருள்களுக்கான குரல்’ பிரசாரம் பலனளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நியூஸ்எக்ஸ் வேர்ல்ட் எனும் உலக தொலைக்காட்சியின் தொடக்கவிழாவை முன்னிட்டு நடைபெற்ற என்எக்ஸ்டி (NXT) மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “உலகம் பல பத்தாண்டுகளாக இந்தியாவை அதன் பின் அலுவலகமாகப் பார்த்தது. ஆனால் இப்போது நாடு உலகின் தொழிற்சாலையாக உருவெடுத்து வருகிறது. இப்போது, ​​இந்தியா தொழிலாளர் சக்தி அல்ல, மாறாக ஓர் ‘உலக சக்தி’.

“பகுதி மின்கடத்திகள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை இந்தியா உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவின் பிரபலமான உணவுகளான மக்கானா, தினை, ஆயுஷ் பொருள்கள், யோகா ஆகியவை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.

“இந்தியாவும் ஒரு பெரிய மோட்டார்வாகன உற்பத்தியாளராக மாறியுள்ளது. மேலும், இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது,” என்று கூறினார்.

“இந்தியாவை எந்த நிறமும் இல்லாமல், அது இருப்பதைப் போலவே வழங்க வேண்டும். அதற்கு எந்த ஒப்பனையும் தேவையில்லை. நாட்டின் உண்மையான சாதனைகள் உலகைச் சென்றடைய வேண்டும்.

“பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்தியாவின் புதிய உலகளாவிய செய்தித் தளங்கள் நாட்டின் சாதனைகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன்.

“21ஆம் நூற்றாண்டில் இந்தியா தொடர்ந்து நேர்மறையான செய்திகளை உருவாக்கி வருவதை உலகம் பார்த்து வருகிறது. இந்தியா இப்போது பல உலகளாவிய முயற்சிகளுக்குத் தலைமை தாங்குகிறது. அண்மையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சநிலை மாநாடு, இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சநிலை மாநாடு போன்றவை இதற்கு உதாரணங்கள்,” என்று விவரித்தார்.

“உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளா, இந்தியாவின் ஒழுங்கமைக்கும் திறன்களையும் புதுமைகளையும் எடுத்துக்காட்டுகிறது.

“எனது அரசாங்கம் பல காலாவதியான சட்டங்களை ரத்து செய்திருக்கிறது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் நடனமாடுவதைக் குற்றமாகக் கருதும் ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட சட்டம், எனது ஆட்சிக் காலத்தில் ரத்து செய்யப்படும் வரை அமலில் இருந்தது.

“லுட்யன்ஸ் ஜமாத் மற்றும் பொதுநல மனு ஒப்பந்ததாரர்கள் போன்றோர், எல்லாவற்றுக்கும் நீதிமன்றங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால், இத்தகைய சட்டம் குறித்து அவர்கள் மௌனம் காத்தனர். அப்போது அவர்கள் சுதந்திரம் பற்றி யோசிக்கவில்லை,” என்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்