புதுடெல்லி: கைப்பேசிகள் முதல் மடிக்கணினிகள் வரையிலான மின்னணுச் சாதனங்களுக்கு உள்ளூரில் உதிரிப் பாகங்களைத் தயாரிக்க, இந்தியா US$5 பில்லியன் (S$6.7பி.) வரை ஊக்குவிப்புகளை வழங்கவுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் மின்னணு உற்பத்தி இரட்டிப்புக்கும் அதிகமாகி, 2024ல் US$115 பில்லியனைத் தொட்டது. ஆப்பிள், சாம்சுங் போன்ற பெருநிறுவனங்களின் கைப்பேசித் தயாரிப்பில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்குக் காரணம்.
உலகின் நான்காவது பெரிய திறன்பேசி உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. எனினும், சீனா போன்ற நாடுகளிலிருந்து உதிரிப் பாகங்களின் இறக்குமதியை அதிகம் சார்ந்திருப்பதால் இந்தியாவின் மின்னணுத் துறை விமர்சனத்தை எதிர்நோக்குகிறது.
“இந்தப் புதிய திட்டம், முக்கிய உதிரிப் பாகங்களைத் தயாரிப்பதை ஊக்குவிக்கும்,” என்று தகவலறிந்த இரு அரசாங்க அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.
இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் புதிய திட்டத்தின்கீழ் இந்த ஊக்குவிப்புகள் வழங்கப்படலாம் என அந்த அதிகாரிகள் கூறினர். இத்திட்டம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதால் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

