மக்களவை நாயகராக ஓம் பிர்லா தேர்வு

2 mins read
656991da-c947-48fd-a5b2-d5eb0dae1499
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் திரு ஓம் பிர்லாவை மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர். உடன் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு (இடது ஓரம்). - படம்: பிடிஐ

புதுடெல்லி: இந்தியாவில் 18வது மக்களவையின் நாயகராக பாரதிய ஜனதா கட்சியின் ஓம் பிர்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் திரு ஓம் பிர்லாவை மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

அவையின் துணை நாயகர் பதவியைத் தங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதற்கு உடன்பட்டால், மக்களவை நாயகரைப் போட்டியின்றித் தேர்வுசெய்ய ஆதரவு தர தயாராக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

ஆனால், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனையடுத்து, பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும் எதிர்க்கட்சிகள் சார்பில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷும் மக்களவை நாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், மக்களவை நாயகரைத் தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஜூன் 26) குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அதிக வாக்குகள் பெற்று ஓம் பிர்லா வெற்றிபெற்றார்.

கடந்த 48 ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்களவை நாயகர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதன்பின் முதன்முறையாக அப்பதவிக்குப் போட்டி நிலவியது.

மக்களவை நாயகராகத் தேர்வுபெற்ற ஓம் பிர்லாவிற்குப் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

“நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பில் திரு ஓம் பிர்லாவிற்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். மக்களவை நாயகர் இருக்கையில் இரண்டாம் முறையாக அமர்கிறீர்கள். இது ஒரு சாதனை. இது மிகப் பெரிய பொறுப்பு. தங்களுடைய அனுபவத்தின் துணையுடன், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எங்களை வழிநடத்துவீர்கள் என நம்புகிறேன்,” என்று பிரதமர் மோடி கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அரசாங்கத்திற்கு அரசியல் அதிகாரம் உண்டு. ஆனால், இந்திய மக்களின் குரலை எதிர்க்கட்சிகள் பிரதிநிதிக்கின்றன. கடந்த ஆட்சிக்காலத்தைவிட இம்முறை அதிகமான மக்களை எதிர்க்கட்சிகள் பிரதிநிதிக்கின்றன. அதனால், அவையில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டியது முக்கியம்,” என்று சொன்னார்.

பின்னர் பேசிய திரு ஓம் பிர்லா, “மக்களவை உறுப்பினர் ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை வெளியிட வாய்ப்பு வழங்குவேன். அனைவரின் ஒத்துழைப்புடன் அவை இயங்கும் என நம்புகிறேன். மக்களவையின் மரபொழுங்கிற்கு உட்பட்டு உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்ய வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்